நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க அணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் சான்றிதழ்கள் பெறவும் பலகட்ட போராட்டங்களை நடத்தி சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். அதிலும் பல இடங்களில் தபால் வாக்குகளை எண்ணாமலேயே மாற்றி மாற்றி அறிவித்துவிட்டதாக பல குழப்பங்கள் இன்னும் நீடிக்கிறது.
இந்த குழப்பங்கள் குறித்து பல வேட்பாளர்களும் நீதிமன்றத்தை நாட தயாராகி உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மணமேல்குடி ஒன்றியத்தில் 14 கவுன்சிலர்களும் தி.மு.க வினர் வெற்றி பெற்றுள்ளனர்.
கறம்பக்குடி ஒன்றியத்தில் 15 வது வார்டில் அ.தி.மு.க – காங்கிரஸ் வேட்பாளர்களுடன் சுயேட்சை வேட்பாளர் தனவேந்தனும் போட்டியிட்டார். இதில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளதாக முதலில் தகவல்கள் வெளியான நிலையில் திடீரென சுயேட்சை வேட்பாளர் தனவேந்தன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வெற்றி சான்றிதழுடன் வெளியே வந்த தனவேந்தனை அ.தி.மு.க ஒ.செ தனது காரில் ஏற்றிச் சென்றுள்ளார். இந்த நிலையில் தனவேந்தன் வீட்டுக்கு வந்த சிலர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த வடகாடு போலீசார் சுயேட்சையாக வெற்றிபெற்ற தனவேந்தனின் மஞ்சுவிடுதி கிராமத்தில் உள்ள வீட்டிற்கு பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.