நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 27 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் விரிவாக வெளியிட்டுள்ளது.
வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம்; வேட்புமனு தாக்கல் செய்யும்பொழுது வேட்பாளருடன் சேர்ந்து மொத்தமாக ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்; காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்; வேட்புமனு தாக்கல் நடைபெறும் நாட்களில் மாலை 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் யாருக்கும் அனுமதி இல்லை; தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்கு இரண்டு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி; 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அஞ்சல் வழியாக வாக்களிப்பதற்கு மார்ச் 25ஆம் தேதிக்குள் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தமிழகம் உட்பட 17 மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.