ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, கொங்கலம்மன் கோவில் வீதி, புது மஜீத் வீதி, இந்திரா நகர் பகுதிகளில் ஏராளமான வட மாநிலத்தவர்கள் கடை வைத்துள்ளனர் இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த வட மாநிலத்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது அவர்கள் கடைகளில் யாரோ சிலர் பூட்டு போட்டு பூட்டி வைத்து இருந்தனர்.
மேலும் அங்கு பிளக்ஸ் பேனர் ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது . அந்த பேனர் மூலம், வடமாநிலத்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வடமாநிலத்தவர் கடைகளுக்கு பூட்டு போட்டதாக தமிழ் தேசிய கட்சியின் முதன்மை செயலாளர் சித்தோடு வீரக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் வட மாநில வியாபாரிகள் சிலர் வந்து தங்கள் கடைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். ஏன் கடைகளுக்கு பூட்டு போட்டீர்கள் என்று போலீஸ் விசாரித்த போது, "இன்று தமிழ்நாடு முழுக்கவே வடமாநில வியாபாரிகள் பல லட்சக்கணக்கான பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் விளைகிற மஞ்சள் உட்பட உற்பத்தியாகிற ஜவுளி என தமிழனின் தொழிலை அவர்கள் தீர்மானிக்கும் அளவுக்கு வந்துவிட்டார்கள்.
அதேபோல் வடமாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் குவிந்துவிட்டனர். ஈரோட்டில் மட்டும் வடமாநில முதலாளிகள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். இங்கு இருக்கும் வளத்தை அவர்கள் தங்களுக்கான வியாபாரமாக மாற்றி செழித்து கொண்டிருக்கிறார்கள். தமிழனுக்கு மிஞ்சியது டாஸ்மார்க் கடை மட்டுமே. மற்ற எல்லா தொழிலையும் அவர்கள் பிடித்துவிட்டார்கள். ஆகவேதான் தமிழகத்திலுள்ள வடமாநில வியாபாரிகளும், வடமாநிலத்தவர்களும் இங்கிருந்து வெளியேற வேண்டும் இல்லையேல் வெளியேற்றப்படுவீர்கள் என்று அவர்களது கடைக்கு அடையாளமாக பூட்டு போடும் போராட்டத்தை நாங்கள் நடத்தினோம். இது ஒரு எச்சரிக்கை தான் எனக்கூறினார் கைது செய்யப்பட்டவர்.
வட மாநிலத்தவர்களின் கையில் தமிழக பொருளாதாரம் போய் விட்டது என்பது உண்மை தான். ஆனால் இதற்கு சரியான முடிவு எடுக்க வேண்டியது ஆளுகிற அரசுகள் தானே...?