ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி முருகன் கோவிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் ஆகம விதிப்படி கடந்த 2018 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. எனவே பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
கோவில் நிர்வாகம் சார்பில் விரைவில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
அதனடிப்படையில் பழனி முருகன் திருக்கோயிலும் மூடப்பட்டது. அதோடு கும்பாபிஷேக பணிகளும் கரோனா மூலம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டதைத் தொடர்ந்து பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகப் பணிகளை மீண்டும் தொடங்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி கோவில் கும்பாபிஷேகப் பணிகள் நேற்று மீண்டும் தொடங்கியது. தற்போது கோவிலின் ராஜகோபுரம், தங்ககோபுரம் ஆகியவற்றின் சிதிலமடைந்து காணப்படும் சிற்பங்களைச் சீரமைப்புப் பணிகள் நடக்க உள்ளது.
அதற்காக கோபுரத்தைச் சுற்றிலும் பெரிய மரக் கம்பிகளால் சாரம் கட்டப்பட்டு வருகிறது. இந்தச் சாரத்தில் நின்று பணியாளர்கள் சேதமடைந்த சிலைகளைச் சீரமைத்து வர்ணம் பூசுதல் உள்ளிட்ட கும்பாபிஷேகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தப் பணிகள் அனைத்தும் விரைந்து முடித்து, விரைவில் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. இந்தக் கும்பாபிஷேக விழாவைக் காண முருக பக்தர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.