கரோனா நோய் தொற்று அபாயத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலை இழப்பு, வருவாய் இழப்பு என பலமுனை தாக்குதலில் சிக்கித் திணறுகின்றனர். காய்கறிகள், பழங்கள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விண்ணை முட்டும் விலையேற்றத்தால் மேலும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.
கரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் ஏப். 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஏப். 29 தேதி முதல் முழு ஊரடங்குக்கு முந்தைய நிலை அமலுக்கு வந்தது. என்றாலும், விளைபொருள்கள் விளையும் இடங்களில் இருந்து சந்தைக்கு வருவதில் தொய்வு ஏற்பட்டது.
இதனால் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. முழு ஊரடங்குக்கு முதல் நாள், சேலம் சந்தைகளில் நிலவிய காய்கறிகளின் விலை மே 1ம் தேதியன்று 30 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்து இருந்தன.
மே 1ம் தேதியன்று சேலத்தில் காய்கறிகளின் விலை விவரங்கள் வருமாறு (அடைப்புக்குள் ஏப். 24ம் தேதி விலை நிலவரம்):
கத்தரி ரூ.30 (20), கேரட் ரூ.60 (20), பீன்ஸ் ரூ.70 (40), பீர்க்கன் ரூ.35 (25), புடலை ரூ.30 (20), தக்காளி ரூ.20 (15), வெண்டை ரூ.30 (20), பச்சை மிளகாய் ரூ.40 (20), முட்டைக்கோஸ் ரூ.20 (10), பெரிய வெங்காயம் ரூ.30 (25), சின்ன வெங்காயம் ரூ.70 (60), பாகல் ரூ.30 (20), பீட்ரூட் ரூ.35 (25), வாழைக்காய் ரூ.10 (8), எலுமிச்சை பழம் ரூ.4 (3), வாழைப்பழம் ரூ.6 (4).
இந்த விலையேற்றம் ஒருபுறம் இருந்தாலும், மீண்டும் திடீரென்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து விடுவார்களோ என்ற ஐயத்தில் வழக்கத்தை விட கூடுதலாக காய்கறிகளை வாங்கினர்.
இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் கூறுகையில், ''ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே கடை போட அனுமதிக்கின்றனர். இதனால் 30 சதவீத வியாபாரம்தான் நடக்கிறது.
சேலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நான்கு நாள்களாக காய்கறி வரத்து அடியோடு முடங்கியது. 29ம் தேதி முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் போதிய அளவில் காய்கறிகள் சந்தைக்கு வரவில்லை. அதனால் இருப்பு வைக்கும் அளவுக்கு வியாபாரிகளுக்கும் காய்கறிகள், பழங்கள் கிடைக்கவில்லை. வரத்து குறைந்ததால்தான் காய்கறிகள், பழங்களின் விலை 30 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. வரத்து அதிகரித்தால் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது,'' என்றனர்.
மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரண கொடுத்தால் போதுமானது என்று மன நிம்மதி அடைந்துள்ள தமிழக அரசு, சந்தைகளில் அத்தியாவசிய பொருள்களின் விலைகள் தாறுமாறாக எகிறி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தட்டுப்பாடான சூழ்நிலையை வியாபாரிகள் லாப நோக்கத்துடன் இரட்டிப்பு விலை வைத்து விற்கும் போக்கும் நிலவுகிறது. விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், அதேநேரம் அத்தியாவசிய பொருள்களின் சரக்கு போக்குவரத்தை சீர்படுத்தவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் விரைந்து செயலாற்ற வேண்டும்.