ஒருபக்கம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான ட்விட்டர் அரசியல், இன்னொருபக்கம் விருதுநகர் மாவட்டத்தில் மனிதநேயம் காட்டியும், இந்த கரோனா காலக்கட்டத்தில் படு பிசியாக இருந்து வருகிறார், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
முதலில் ட்விட்டருக்கு வருவோம்!
‘உலகையே இன்னும் குழப்பும் கரோனா சார்ந்த சந்தேக மரணங்களைத் தீர்மானிப்பதில், தரவுகளின் ஆய்வுகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது. ICMR-ஐ ஆலோசித்து, தகுந்த வழிமுறைகளின்படி, வேறுபாடுகளை விசாரிக்க முதல்வரே நிபுணர் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தார். அதில் வந்த முடிவுகளை நமது அரசு சார்பில், நாமே அறிவித்துள்ளோம். எங்கேயோ காணாமல் போன அண்டாவைக் கண்டுபிடிக்கும் துப்பறிவாளர் மாதிரி, மேக்கப் எல்லாம் போட்டு, கையைக் காலை ஆட்டி, பின்னணி இசையோடு நாடக பாணியில், வீடியோவில் வாய்க்கு வந்ததை உளறும், திமுக தலைவரின் கேடுகெட்ட பிண அரசியலை, வன்மையாக கண்டிக்கிறேன்..’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அடுத்து, ‘மானுடம் காக்கும் மகத்துவமே!’ என்று கே.டி.ராஜேந்திரபாலாஜிக்காக, விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தநாள் போஸ்டர் ஒட்டியிருந்தனர். அந்த போஸ்டர் வாசகத்துக்கு ஏற்றாற்போல், தனது சொந்த நிதியிலிருந்து, அமைச்சர் வாரி வழங்கியபடியே இருக்கிறார்.
சிவகாசி – சித்துராஜபுரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ், அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். கரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வந்தார். அப்போது, கரோனா தொற்று ஏற்பட்டு, ஆறு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயபிரகாஷ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ரூ. மூன்று லட்சம் வழங்கினார் கே.டி.ராஜேந்திரபாலாஜி. கடந்த வாரம், சேத்தூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவலர் அய்யனாருக்கு கரோனாவால் மரணம் ஏற்பட, அந்த குடும்பத்துக்கும் ரூ. மூன்று லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
‘விருதுநகர் மாவட்டத்தில் எண்ணற்ற ஏழைகளுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்து உயிர் காத்தவர்; உயர்கல்வி கற்க வழியின்றி தவிக்கும் ஏழை மாணாவர்களின் உயர்கல்விக்கு வித்திட்டவர்; உடன் இருப்போர் முகக்குறிப்பறிந்து உதவிடும் வள்ளல்!’ என வலைதளங்களிலும் அவரது விசுவாசிகள், புகழ்ந்து தள்ளுகின்றனர்.
பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் ‘மாறுபட்ட’ அரசியல்வாதியாக திகழ்கிறார், கே.டி.ராஜேந்திரபாலாஜி!