நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தமிழகம் முழுக்க வேட்புமனு பரிசீலனை மற்றும் திரும்பப் பெறுவது முடிந்து களத்தில் உள்ளவர்கள் இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் முறையாக அறிவிக்கப்பட்டனர்.
அதில் பல்வேறு மாவட்டங்களில் கிராமப்புற ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டி இல்லாமல் பலர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் ஈரோடு மாவட்டம் கஸ்பா பேட்டை ஊராட்சி மன்றத்திற்கு போட்டி இல்லாமல் சித்ரா அர்ஜுனன் என்பவர் மட்டுமே மனுத் தாக்கல் செய்திருந்ததால் அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவிப்பு செய்தார்.
சென்றமுறை இங்கு ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் அர்ஜூனன் அவரது மனைவி தான் இப்போது ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதிமுக, திமுக, காங்கிரஸ் என பல்வேறு கட்சிகள் அந்த ஊராட்சி மன்றத்தில் இருந்தாலும் அர்ச்சுனன் எந்த கட்சியையும் சாராதவர் என்றும், அவர் தலைவராக இருந்தபோது இந்த கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் பலவும் செய்திருக்கிறார் என்பதால் மக்கள் இவரை எதிர்த்துப் போட்டியிடாமல் இவர் மனைவியை வெற்றி பெற வைத்துள்ளனர் என கிராம மக்கள் கூறுகின்றனர்.