திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 34 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 18 ஒன்றியங்களில் உள்ள 341 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 860 ஊராட்சிகளுக்கான ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதில் போட்டியில்லாமல் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் தவிர மீதியிருந்த 5848 பதவிகளுக்கு வாக்குபதிவு நடைபெற்றது.
வாக்குபதிவுக்கு பின் வாக்குப்பெட்டிகள் அந்தந்த ஒன்றிய தலைமையகத்திலேயே உள்ள பள்ளிகளில் வைக்கப்பட்டு, போலீஸ் பாதிகாப்பு போடப்பட்டு, வாக்குபெட்டி வைக்கப்பட்டுள்ள அறைகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர்க்கான வாக்கு நிலவரம் உடனடியாக தெரிந்துவிடும். அடுத்தபடியாக ஒன்றிய குழு உறுப்பினர்களின் வெற்றி விபரம் தெரியவரும். இறுதியாகவே மாவட்ட கவுன்சிலர் யார் என்பது தெரியவரும். இது நல்லிரவை கடந்தும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்பது குறிப்பிடதக்கது.
வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் உடனடியாக வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி அவர்களை வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கந்தசாமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தியிடம் கோரிக்கை மனுவாக தந்துள்ளனர்.
அப்படி வெளியேற்றினால் எந்த பிரச்சனையும் வராது, 2011ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அப்படி செயல்படாததால் அதிகாரிகள் துணையுடன் ஆளும்கட்சியினர் வெற்றி ரிசல்ட்டை மாற்றினார்கள். இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது என விளக்கினார். இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரான கந்தசாமி எந்த உறுதிமொழியும் தரவில்லை என்பதால் திமுக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.
அதேநேரத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க, வேட்பாளர்களுக்கு சட்ட உதவிகள் செய்ய ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் வழக்கறிஞர் குழு ஒன்றை மாவட்ட திமுக நியமித்துள்ளது. ஆளும்கட்சி அதிகார அத்துமீறல்களில் ஈடுப்பட்டால் அதனை தடுக்க வேண்டியது வழக்கறிஞர்கள் பணி என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதோடு, ஆளும்கட்சிக்கு துணைபோகும் அதிகாரிகள் யார், யார் என்கிற பட்டியலையும் சேகரிக்கச்சொல்லி திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.