Skip to main content

85 சென்ட் நிலத்துக்காக அண்ணனை கொன்ற தம்பிகள்; காவல்துறை விசாரணை!

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

brother passes away in the issue of land

 

சேலம் அருகே, 85 சென்ட் நிலத்தை பாகம் பிரிப்பதில் முட்டுக்கட்டையாக இருந்த பெரியம்மா மகனை, கத்தியால் வெட்டிக்கொன்ற தம்பிகள் மற்றும் சித்தியைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள அத்திமரத்து வலவு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவருக்கு உண்ணாமலை, சின்னம்மாள் என இரண்டு மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவி உண்ணாமலைக்கு சின்னதம்பி (41), ராஜேந்திரன் என இரண்டு மகன்களும், இரண்டாம் தாரமான சின்னம்மாளுக்கு முனியப்பன், பூபாலன் என இரு மகன்களும் இருக்கின்றனர். அனைவரும் ஒரே இடத்தில் வசிக்கின்றனர்.

 

இவர்களுக்கு சொந்தமாக தலா 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இது தவிர, பொதுவாக உள்ள 85 சென்ட் நிலத்தைப் பாகம் பிரித்துக் கொடுப்பதில் இரண்டாவது மனைவியின் மகன்களுக்கும், மூத்த மனைவியின் மகன் சின்னதம்பிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 30) அதிகாலையில் சின்னதம்பி வயலில் தண்ணீர் பாய்ச்சிவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். வெள்ளிக்காட்டுவலவு பகுதி அருகே வந்தபோது, அவரை சித்தி சின்னம்மாளும், அவருடைய மகன்களும் வழிமறித்து தகராறு செய்தனர். நிலத்தைப் பிரித்துக் கொடுப்பதில் முட்டுக்கட்டை போடக்கூடாது என்றனர். அதற்கு சின்னதம்பி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சின்னம்மாளின் மகன்கள் சின்னதம்பியை சரமாரியாக தாக்கினர். கத்தியால் அவருடைய கழுத்து, கைகளை வெட்டிக் கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த சின்னதம்பி சம்பவ இடத்திலேயே பலியானார். கூச்சல் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள், சம்பவ இடத்துக்கு ஓடி வருவதைப் பார்த்த சின்னம்மாளும், அவருடைய மகன்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

 

இதுகுறித்து தகவல் அறிந்த கருமந்துறை காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலத்தை, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பொதுவாக உள்ள 85 சென்ட் நிலத்தைப் பாகம் பிரித்துக்கொள்வதில் சின்னதம்பி முட்டுக்கட்டையாக இருந்ததால், ஆத்திரத்தில் அவருடைய சித்தியின் மகன்கள் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள முனியப்பன், பூபாலன், சின்னம்மாள் ஆகியோரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்