ஈரோடு அருகே உள்ள முத்துமாணிக்கம் நகர் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கொலை செய்து உடல் பாகத்தை துண்டு துண்டாக வெட்டி அதை சாக்கு மூட்டையில் கட்டி, வீட்டில் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலையில் ஈடுபட்டதாக வட இந்திய தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் நிதீஷ் குமார், சசி தம்பதியினர். இவர்கள் ஈரோடு முத்துமாணிக்கம் நகர் பகுதியில் கடந்த பத்து மாதமாக ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு கூலி வேலை செய்து வந்தனர்.
இவர்கள் சொந்த ஊரான பீகார் செல்லும்போது ரயிலில் நவின்குமார் என்ற பீகார் இளைஞன் பழக்கமாகியுள்ளான் சில மாதங்களுக்கு முன் அவனும் இவர்கள் வீட்டிலேயே தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளான்.
இந்த நிலையில் நிதீஷ்குமாரும் சசியும் தீடீரென பீகாரில் உள்ள நவின்குமார் பெற்றோர்க்கு போன் மூலம் ரூ 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். நவின்குமார் பெற்றோர், இது குறித்து பீகார் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்கள். அதன் பேரில் பீகார் போலீசார் ஈரோட்டிற்கு வந்துள்ளனர்.
இதற்கிடையே போலீஸ் தேடுவதை அறிந்த நித்திஷ்குமார், சசி ஆகிய இருவரும் நவின்குமாரை கொலை செய்து இரும்பை அறுக்கும் ஆக்சா பிளேடு மூலம் தலை, கை, கால், இடுப்பு என உடல் பாகத்தை தனிதனியாக துண்டுதுண்டாக வெட்டி அதை சாக்கு பையில் போட்டு மூட்டையாக கட்டி வைத்துவிட்டனர்.
பீகார் போலீசார் ஈரோடு போலீஸ் உதவியுடன் அப்பகுதியில் விசாரணை செய்து நித்தீஷ்குமார் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது நவின்குமாரை கொலை செய்து மூட்டைகட்டி வைத்து இருப்பது தெரிய வந்தது. நித்தீஷ்குமார் அவரது மனைவி சசி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நவின்குமார் உடல் பாகத்தை உடற்கூறு ஆய்வுக்கு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
நவின்குமார் கொலை சம்பவம் குறித்து மேலும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்றும் இது பணம் கேட்டு மிரட்டலுக்காக நடந்த கொலையா? அல்லது கள்ளக் காதல் விவகாரமா என்று ஈரோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர், இளைஞர் கொல்லப்பட்டு உடல் பாகங்கள் ஐந்தாறு துண்டுகளாக வெட்டப்பட்டு சாக்கு மூட்டையில் வீட்டுக்குள் வைத்திருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.