திருவாரூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண் வேட்பாளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால், தனக்கான ஜனநாயக உரிமையை வேண்டுமென்றே பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருக்கிறார் வேட்பாளர் சசிகலா.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 27- ஆம் தேதி 5 ஒன்றியங்களுக்கு முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள ஐந்து ஒன்றியங்களுக்கு நேற்று 30- ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா பகுதிக்குட்பட்ட பல்லவநத்தம் பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவர், அப்பகுதியில் உள்ள அதம்பாவூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டுள்ளார்.
இந்நிலையில் பல்லநத்தம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சசிகலா தனது வாக்கை செலுத்துவதற்காக நேற்று (30.12.2019) மாலை 04.00 மணியளவில் சென்ற போது வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வேட்பாளர் பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லையா, இது என்ன ஜனநாயக நாடா, அரசியல் கட்சியில்லாமல் சுயேட்சையாக போட்டியிட நினைக்கக்கூடாதா என ஆதங்கத்தோடு கத்தியபடியே வெளியில் வந்து அவரது ஆதரவாளர்களோடு அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்தார்.
நேற்று (30.12.2019) மாலை 05.00 மணிக்குள் வாக்கு செலுத்தும் நேரம் முடிவடையும் நிலையில் தனக்கான ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் போராட்டத்திலும் ஈடுபட்டார்.