திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம், எர்ணாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அந்த ஊராட்சிக்கு உட்பட்ட பானாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மனைவி பாஞ்சாலை போட்டியிடுகிறார். இவருக்கு பூட்டு சின்னம் ஒதுக்கப்பட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 29ந்தேதி வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாமல் இருப்பதை அறிந்து அதிர்ச்சியாகியுள்ளார். இதுப்பற்றி விசாரித்தபோது, கடந்த 23 ஆம் தேதி வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவர் இறந்து விட்டதாக கூறி பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், வார்டு எண் 6ல் 25வது பெயராக என் பெயர் இருந்து வந்தது. கடந்த சட்டமன்ற தேர்தல் வரை வாக்களித்துள்ளேன். தலைவர் பதவிக்கு நின்றுள்ள நான் வேட்புமனு தாக்கலின் போதும் என் பெயர் பட்டியலில் இருந்தது, வேட்பு மனு பரிசீலனையின் போதும் இருந்தது. என்னுடைய வேட்பு மனு ஏற்கப்பட்டு பூட்டு சாவி சின்னம் ஒதுக்கப்பட்டது. அப்படியிருக்க இப்போது என் பெயர் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு தான் என் பெயர் அதில் இல்லாமல் போய் உள்ளது. உயிருடன் உள்ள என்னை இறந்ததாக சொல்லி நீக்கியது எப்படி ?. ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த தவறு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சதியால் என் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதா என புகார் மனுவில் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிகாரிகள் அதுக்குறித்து இதுவரை எந்த பதிலும் அவருக்கு வழங்கவில்லை. இதுகுறித்து தேர்தல் அலுவலர்களிடம் விசாரித்தபோது, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை, நீக்கம் என்பது வருவாய்த்துறை அலுவலர்கள் பணி. அதற்காக தேர்தல் பிரிவு என்கிற தனி துறையே உள்ளது. அவர்கள் தான் சேர்த்தல், நீக்கல், திருத்தல் போன்ற பணிகளை செய்கிறார்கள். ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளான நாங்கள் அவர்கள் தரும் வாக்காளர் பட்டியலை வைத்து தேர்தல் மட்டுமே நடத்துகிறோம். வேட்பாளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த பிரச்சனையால் வாக்குப்பதிவு நிற்காது. வாக்குப்பதிவு நடைபெறும். பெயர் இல்லாததால் வேட்பாளர் வாக்களிக்க முடியாது.
வாக்கு எண்ணிக்கையின் போது இந்த ஊராட்சி மன்றத்தின் வாக்கு சீட்டுகள் எண்ணாமல் தனியாக பாதுகாப்பாக வைக்கப்படும். இதுப்பற்றி மாநில தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் பதில்படி, முடிவெடுக்கப்படும் என்கிறார்கள். வேட்பாளர் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்ததாக நீக்கியிருப்பது பலதரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30ந்தேதியான இன்று நடைபெற்றுவருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வேட்பாளரே வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.