உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளிவந்தபோது கூட்டணி கட்சியினரை விட அதிமுகவினர் தான் அதிர்ச்சியாகினர். காரணம் எம்.எல்.ஏக்களாக இருந்தவர்கள், இருப்பவர்கள் தங்களது குடும்பத்தில் இருந்து ஒருவரை களம்மிறக்கியவர்கள், தாங்களும் களம்மிறங்கினர். தேர்தல் முடிந்த நிலையில் அப்படி களம்மிறங்கியவர்களுக்கு வெற்றியா, தோல்வியா என விசாரித்தோம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலர் வார்டு எண் 25ல் போட்டியிட்டார் கீழ்பென்னாத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ அரங்கநாதன். அவரது மகனும் துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளருமான ஜெயபிரகாஷ், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள 7வது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். அப்பா தோல்வியை சந்திக்க மகன் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்.
போளுர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஜெயசுதா, போளுர் ஒன்றிய குழு சேர்மன் பதவியில் உட்கார ஆசைப்பட்டு வார்டு 16ல் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயசுதாவின் மகன் விமல்ராஜ் அதே போளுர் ஒன்றியத்தில் 20வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளார்.
செய்யார் ஒன்றியத்தில் முன்னாள் சேர்மன் விமலாமகேந்திரன், முதல் வார்டில் கவுன்சிலர்க்கு போட்டியிட்டார், விமலாவின் கணவர் மாவட்ட இலக்கிய அணி செயலாளரா இருக்கற மகேந்திரன், 15வது வார்டில் போட்டியிட்டார். கணவன் – மனைவி இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
வெம்பாக்கம் ஒன்றியத்தில் செய்யார் எம்.எல்.ஏவும், வடக்கு மா.செவுமான அதிமுக தூசி.மோகனின் மருமகன் ராஜ்கணேஷ் 8வது வார்டில் நின்றார், அவர் வெற்றி பெற்றுள்ளார். தூசி.மோகனின் தம்பி குமரசேன் 17வது வார்டில் போட்டியிட்டார் அவர் தோல்வியை சந்தித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் மகன் அரவிந்தனுக்கு, 16வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார் அவர் வெற்றி பெற்றுள்ளார். இப்படி உள்ளாட்சியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆளும்கட்சியை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கம் கொடிக்கட்டி பறக்க துவங்கியுள்ளது.