Skip to main content

வரும் 30ஆம் தேதி மீண்டும் தேர்தல் - பேரம்... ஆள் கடத்தல்... பராக்... பராக்...!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27 மாவட்டங்களில் நடைபெற்றது. பிறகு யூனியன் சேர்மேன், துணை தலைவர் மற்றும் கிராம பஞ்சாயத்து துணைதலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் சென்ற 11ந் தேதி நடைபெற்றது. இதில் எதிர்கட்சி மற்றும் சுயேச்சைகளை விலைக்கு வாங்கியும், ஆட்கடத்தலில் ஈடுபட்டதும் என பல முறைகேடுகள் நடந்தது. பல இடங்களில் மறைமுக தேர்தல் நிறுத்தப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. அப்படித்தான் ஈரோடு மாவட்டத்தில் சில இடங்கள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. அவைகளுக்குத்தான் மறுதேர்தல் 30ந் தேதி நடக்க உள்ளது.

 

 local body election-admk-dmk

 



ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவர், பஞ்சாயத்து துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் சென்ற 11ம் தேதி நடைபெற்றது. இதில், ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 6 வார்டுகளில்  அ.தி.மு.க  மூன்று , திமுக மூன்று வார்டுகள் என சமமாக வெற்றி பெற்றிருந்தனர். இதில் ஈரோடு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர் பதவியை யார் கைப்பற்றுவார்கள் என்று பரபரப்பான நிலை நிலவியது.

ஈரோடு  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடக்க இருந்தது. இதில் திமுக உறுப்பினர்கள் 3 பேரும் வாக்களிக்க அங்கு வந்திருந்தனர். ஆனால் அதிமுக உறுப்பினர்கள் மூன்று பேரையும் அ.தி.மு.க.நிர்வாகிகள் எங்கோ கடத்திச் சென்று விட்டதால் அவர்கள் மூவரும் வரவில்லை. இதனால்  மறைமுகத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதே போல் தூக்கநாய்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த தேர்தலில் வாக்குப்பெட்டியை அதிமுக உறுப்பினர் எடுத்து கொண்டு ஓடி விட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், சென்னிமலை ஊராட்சியில் கொடுமணல் மற்றும் புஞ்சை பாலத்தொழுவு பஞ்சாயத்து துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தலும் பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் தூக்க நாய்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒன்றிய தலைவர், ஒன்றிய துணைதலைவர் பதவிகளுக்கும், அதேபோல் கொடுமணல் மற்றும் புஞ்சை பாலத்தொழுவு பஞ்சாயத்து துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஒன்றிய தலைவர் மற்றும் பஞ்சாயத்து துணை தலைவர் பதவிக்கு காலை 10.30 மணிக்கும், ஒன்றிய துணை தலைவர் பதவிக்கு மதியம் 3 மணிக்கும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

 



ஈரோடு ஊராட்சி மற்றும் தூக்க நாய்கன்பாளையம் தலைவர் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டு  வருகின்றனர். தூக்க நாய்கன்பாளையத்தில் மொத்தம் 11 கவுன்சிலர்கள், அதில் தி.மு.க. 7 இடங்களிலும், அ.தி.மு.க. 3 இடங்களிலும், சுயேச்சை ஒருடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் தி.மு.க. மூன்று பேரை வலைத்து விட்டதாகவும், ஈரோட்டில் மூன்றில் ஒரு தி.மு.க. கவுன்சிலரை அ.தி.மு.க. கவனித்து விட்டதாகவும் அ.தி.மு.க. அரசியல் வட்டாரம் கூறுகிறது.

தி.மு.க. வட்டாரம் புதுக்கோட்டையில் பறிகொடுத்தது போலபோனால் போகட்டும் போடா என்ற மனநிலையில் உள்ளது.இந்த மறைமுக தேர்தல் சென்ற முறை நடைபெறாமல் நிறுத்தப்பட்ட அல்லது ஒத்தி வைக்கப்பட்ட 27 மாவட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நடக்கிறது. ஆக ஆட்கடத்தல், பண பேரம், கட்சி தாவல் இப்போது தொடங்கி விட்டது.

சார்ந்த செய்திகள்