Skip to main content

ஒலிம்பிக்கிற்கு தயாராகும் எல்.கே.ஜி. சிறுமி! 

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

LKG  Little girl prepares for Olympics

 

சிதம்பரம் அருகே மணக்குடியானிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மோகன் - சத்யா தம்பதியின் இளைய மகள் அனுஸ் ரீ(4). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. கல்வி பயின்றுவருகிறார். இவருக்குத் தானாகவே 3 வயதிலிருந்து கழி மற்றும் கம்பிகளில் இரண்டு கைகளைப் பிடித்தவாறு தொங்கிச் செல்லும் திறமை இருந்துள்ளது. இதனைக் குழந்தையின் பெற்றோர்கள் விளையாட்டாக எடுத்துக்கொண்டுள்ளனர். ஆனால் தொடர்ந்து 5 நிமிடம் 10 நிமிடம் என தொங்கியவாறு செல்வதைப் பார்த்த பெற்றோர்கள் திகைத்துப் போய் இவரது திறமையைக் கவனிக்க தொடங்கியுள்ளனர்.

 

அதனைத்தொடர்ந்து, குழந்தை தொங்கியவாறு செல்வதை வீடியோ எடுத்து ‘சோழன் புக் ஆஃப் வேல்டு ரெக்கார்டு’ என்ற நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளனர். இதனைப் பார்த்து வியந்துபோன அந்த நிறுவனத்தினர், சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம், “இதேபோல் ராணுவத்தில் மங்கிபார் என்ற பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதில் வீரர்கள் பலர் பயிற்சி பெற்றுவருகிறார்கள். எதிரிகளை மரம் மற்றும் கயிறுகளில் நீண்ட தூரம் தொங்கியவாறு சென்று தாக்குவதற்கு இதுபோன்று தனித்திறமையுள்ளவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். அதேபோல் ஒலிம்பிக்கில் இதுபோன்ற போட்டிகள் உள்ளன. எனவே குழந்தைக்கு இயற்கையிலே 4 வயதில் இதுபோல் திறமை உள்ளது வியப்பாக உள்ளது. குழந்தைக்கு வீட்டிலே பயிற்சி கொடுங்கள்” என்று கூறியுள்ளனர்.

 

அதன் அடிப்படையில் பெற்றோர்கள் அவருக்கு கடந்த 4 மாதங்களாக வீட்டிலே பயிற்சி கொடுத்துவந்துள்ளனர். அதனடிப்படையில் சிதம்பரம் ராமசாமி மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை (15.12.2021) காலை குழந்தையின் திறமையை உலக சாதனையாகப் பதிவு செய்வதற்கு சமதள இரும்பு குழாய் அமைக்கப்பட்டதில் குழந்தை தொங்கியவாறு சென்றார். இதில் 70 மீட்டர் தூரத்தை 87 செகண்டுகளில் கடந்து உலக சாதனையைப் பதிவு செய்துள்ளதாக நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். அதேநேரத்தில் இதுபோன்ற சாதனையை யாரும் செய்யவில்லை. இது புதிய முயற்சி என ‘சோழன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு’ பொதுமுகமையர் பிரபு கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து குழந்தைக்கு சாதனைச் சான்று வழங்கப்பட்டது.

 

LKG  Little girl prepares for Olympics

 

இதுகுறித்து அவரது தாய் சத்யா கூறுகையில், “எங்களுக்கு இரண்டு மகள்கள். முதல் மகள் அக்ஷிதா, 5ஆம் வகுப்பு படிக்கிறாள். இரண்டாவது மகள் அனுஸ்ரீ (4). இவள், 3 வயது இருக்கும்போது வீட்டில் தொட்டில் கட்டிப் போடுவோம். அப்போது தொட்டிலில் படுக்காமல் எழுந்திருந்து அதன் மேல் ஏறுவாள். இதனைக் குழந்தைத்தனமாக எடுத்துக்கொண்டோம். பின்னர் கீற்றுக் கொட்டகையில் உள்ள கழியில் தொட்டில் கட்டும்போது, அதில் உள்ள கழியில் ஏறி தொங்கியவாறு இந்தக் கடைசிக்கும் அந்தக் கடைசிக்கும் செல்வாள். மேலும், வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் நெல்லிக்காய் மரம், புளியமரம் ஆகியவற்றில் கிடுகிடுவென ஏறி கிளைகளுக்குச் சென்றுவிடுவாள். இவளை இறக்குவதற்கு பெரும்பாடாக இருக்கும்.

 

தற்போது  நெல்லிக்காய் வேண்டும் என்றால் இவள்தான் எங்களுக்குப் பறித்துக் கொடுப்பாள். இதனைத்தொடர்ந்து அவள் தொங்கியவாறு செல்வதை வீடியோவாக பதிவுசெய்து சோழன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு என்ற நிறுவனத்திற்கு உலக சாதனையாகப் பதிவு செய்வதற்காக அனுப்பினேன். அதனைத்தொடர்ந்து தற்போது இவளது சாதனை, உலக சாதனையாகப் பதிவு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இவளது திறமைக்கு நமது நாட்டைக் காக்க ராணுவத்திற்கு அனுப்பவும், ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கும் வகையில் இவளது திறமையை வளர்ப்போம்” என்றார்.


4 வயது குழந்தை உலக சாதனை செய்தது பள்ளியில் இருந்த அனைவருக்கும் திகைப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்