அண்மை காலங்களாகவே ஹோட்டல் உணவுகளில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் பொருட்கள் கிடப்பது தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் தனியார் உணவகத்தில் வாங்கப்பட்ட பீட்ரூட் பொரியலில் எலி தலை இருந்தது, அதேபோல் உணவில் பேண்டேஜ் இருந்தது தொடர்பான புகைப்படங்களும் புகார்களும் வைரலாகி இருந்தன.
இந்நிலையில் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள நவீன் பாரடைஸ் என்ற உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்பட்ட தேங்காய் சட்னியில் பல்லி இருந்ததாகக் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உணவருந்த வந்தவர்கள் ஹோட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் இன்று காலை அந்த ஹோட்டலில் உணவருந்த வந்த பொழுது பரிமாறப்பட்ட தேங்காய் சட்னியில் பல்லி இருந்ததாக புகார் கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் ஹோட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவை சிறிய பாட்டிலில் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.