Skip to main content

கச்சா எண்ணெய்க் கசிவால் பறிபோகும் மீனவர் வாழ்வாதாரம்!

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

Livelihood of fishermen of Nagai district is in question due to crude oil spill

 

"கடலில் கலந்த கச்சா எண்ணெய் கசிவினால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. கடலுக்கு அடியில் அமைந்துள்ள சிபிசிஎல் பைப் லைனை முற்றிலும் அகற்ற வேண்டும்" என நாகூரில் நடந்த ஏழு கிராம மீனவர்கள் கூட்டத்தில் அதிரடியாக முடிவு செய்துள்ளனர்.

 

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென உடைந்து, நாகூர் முதல் வேளாங்கண்ணி வரையிலான கடல் நீர் முழுவதும் பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் படர்ந்துள்ளது. கடலில் படர்ந்துள்ள கச்சா எண்ணெய்யின் வீரியத்தால் கடலோரத்தில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக் கோளாறு ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

 

Livelihood of fishermen of Nagai district is in question due to crude oil spill

 

இதற்கிடையில் உடைந்த குழாயை அடைப்பதற்கான முயற்சியில் சிபிசிஎல் பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு கட்ட வேலைகளை மேற்கொண்டு வந்தனர். அதற்காக நான்கு பொக்லைன் இயந்திரம், மணல் மூட்டைகள் மற்றும் கச்சா எண்ணெயை உறிஞ்சி எடுப்பதற்கான நவீன இயந்திரம் உள்ளிட்டவை நாகூருக்கு கொண்டு வந்து இன்று அதிகாலை 3 மணி அளவில் கச்சா எண்ணெய் கசிந்த இடத்தை சரி செய்துவிட்டதாக சிபிசிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

 

இந்த நிலையில் இன்று காலை மீனவர்கள் வந்து கடற்கரையில் பார்த்த பொழுது அங்கு பைப் லைனில் இருந்து மீண்டும் கச்சா எண்ணெய் கசிந்து கொண்டிருந்தது. இதனால் ஆவேசம் அடைந்த நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் பைப் லைனை முற்றிலும் அகற்ற வேண்டும் என இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர். மீனவர்களின் போராட்டம் காரணமாக அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Livelihood of fishermen of Nagai district is in question due to crude oil spill

 

இதற்கிடையில் நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் இன்று நாகை வட்டத்திற்குட்பட்ட மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டத்தைக் கூட்டினர். இக்கூட்டத்தில் “நாகூர் முதல் நாகை வரை எண்ணெய் படலம் படர்ந்து மீன்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள், அரசுத்துறை அதிகாரிகளுடன் நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவ கிராம மக்களுக்கு சிபிசிஎல் நிறுவனத்திடம் இருந்து அரசு நிவாரணம் பெற்றுத் தர வலியுறுத்த வேண்டும் என்றும் மக்களைப் பாதுகாக்க உடைந்த கச்சா எண்ணெய் பைப் லைனை உடனடியாக அடைக்க வேண்டும். சுவாசக் கோளாறு மற்றும் கண் எரிச்சலுக்கு ஆளாகி பாதிக்கப்பட்ட நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம மக்களுக்கு, அரசு முதலுதவி மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்” என முடிவெடுத்தனர். மேலும், “நாகூர் பட்டினச்சேரியில் கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயை சிபிசிஎல் நிறுவனம் முற்றிலும் அகற்ற வேண்டும்” என்கிறார்கள் நாகூர் பட்டினச்சேரி கிராம மீனவர்கள். 

 

இதனிடையே எண்ணெய் படலத்தை அகற்றுவது குறித்து தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன், இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் சிபிசிஎல் நிர்வாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்