பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக வந்த ரயிலில் வெளிமாநிலத்தில் இருந்து சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட 83 லிட்டர் மதுபானங்களை ரயில்வே காவல்துறையினர் கைப்பற்றினர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக ரயிலில் மதுபாட்டில்கள் கடத்திவரப்படுவதாக சேலம் ரயில்வே காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, காவல்துறையினர் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாகச் சென்ற அனைத்து ரயில்களிலும் சோதனை நடத்தினர்.
மைசூருவில் இருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற சிறப்பு ரயில் திங்களன்று (அக். 18) அதிகாலையில் சேலம் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. அந்த ரயிலில் சோதனை செய்தபோது, ஒரு பெரிய டிராவல்ஸ் பை இருப்பது தெரியவந்தது. அந்தப் பையை திறந்து பார்த்தபோது, அதில் 401 மதுபான பாக்கெட்டுகளும், 66 மதுபான பாட்டில்களும் இருப்பது தெரியவந்தது. அதேநேரம், அந்த பையைக் கொண்டுவந்த பயணி யார் என்பது தெரியவில்லை.
கேட்பாரற்றுக் கிடந்த அந்தப் பையில் மொத்தம் 83 லிட்டர் மதுபானம் இருந்ததும், அவை கர்நாடகா மாநிலத்திலிருந்து சட்ட விரோதமாக கடத்திவந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து சேலம் ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.