ஒடிசா மாநிலம் கந்தர்கல் மாவட்டம், ரூர்கேலா நகரத்தை சேர்ந்த ஆகாஷ் தாஸ் (வயது 28), ஜித்தன் கிரி (வயது 26), அனில் குமார் ஓஜா (வயது 23), சுக்தேவ்கடையா (வயது 50), சோட்டுபடாயக் (வயது 28) ஆகிய ஐந்து வடமாநில இளைஞர்கள் சென்ட்ரிங் வேலை செய்வதற்காக சுவேதா விரைவு ரயில் மூலமாக ஒடிசாவில் இருந்து மதுரை நோக்கி கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது தமிழகத்திற்குள் ரயில் வந்து கொண்டிருந்தபோது ஆகாஷ் தாஸ் என்பவர் தனக்கு வேலை வேண்டாம் எனவும், வீட்டிற்கு நான் திரும்பி செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார். அப்போது அவருடன் இருந்த சக நண்பர்கள் ஆகாஷ் தாஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும், கொடுத்த அட்வான்ஸ் தொகை 3000 ரூபாயை திருப்பிக் கொடுக்கச் சொல்லியும் சண்டையிட்டுள்ளனர்.
அப்போது விருத்தாசலம் அடுத்த தாழநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள கேட் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது 4 நண்பர்களும் சேர்ந்து, தங்களது சக நண்பரான ஆகாஷ் தாஸை ஓடும் ரயிலின் பின்பக்க கதவை திறந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆகாஷ் தாஸ் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து விருத்தாச்சலம் நாச்சியார்பேட்டை பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியர் முருகன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், விருதாச்சலம் இருப்புப்பாதை காவல்துறையினர் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கின் விசாரணையானது விருதாச்சலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் 3 இல் நடைபெற்று வந்த நிலையில், அரசு தரப்பில் 22 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜித்தன் கிரி, அனில் குமார் ஓஜா, சுக்தேவ் கடயா, சோட்டுபடாயக் ஆகிய 4 பேர் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதால், நால்வருக்கும் ஆயுள் தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பிரபா சந்திரன் தீர்ப்பளித்தார். மேலும் அபராதம் கட்டத் தவறினால், கூடுதலாக மூன்று மாத சிறை தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்தார்.
பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஆயுள் தண்டனை கைதிகள் 4 பேரையும் காவல்துறையினர் கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர். வேலைக்காக வந்த தனது நண்பனை ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவத்தில் நான்கு வட மாநிலத்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்ட சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.