கருமலைக்கூடல் அருகே, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை செல்லோ டேப்பால் முகத்தில் சுற்றி, மூச்சுத்திணற வைத்துக் கொலை செய்துவிட்டு, இரிடியம் உலோக நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்ற 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சேலம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் அருகே உள்ள குஞ்சாண்டியூரைச் சேர்ந்தவர் நடராஜன் (75). வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பழனியம்மாள் (75). இவர், ஓய்வு பெற்ற அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர். இவர்கள் வீட்டில் அரிதான இரிடியம் உலோகம் வைத்திருந்தனர். அதை விற்பனை செய்வதற்காக தங்களுக்குத் தெரிந்த சில தரகர்களின் உதவியை நாடினர்.
இது தொடர்பாக நங்கவள்ளியைச் சேர்ந்த நாகப்பன், பெரியசாமி ஆகியோர் அவர்களுடைய வீட்டிற்குச் சென்று இரிடியம் உலோகத்தைப் பார்த்துவிட்டு வந்தனர். அவர்கள் மூலமாக மேலும் சில முகவர்களும் வந்து விசாரித்து விட்டுச் சென்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி இரிடியம் உலோகத்தை வாங்குவதற்காக 7 பேர் கொண்ட கும்பல் நடராஜனின் வீட்டிற்கு வந்தது. வீட்டில் வயதான நடராஜனும், அவருடைய மனைவியும் மட்டுமே இருப்பதை உறுதி செய்து கொண்ட அந்த கும்பல், திடீரென்று அவர்களை சரமாரியாகத் தாக்கியது.
சத்தம் போட்டால் கேட்காமல் இருப்பதற்காக அவர்களின் வாய், முகத்தைச் சுற்றி செல்லோ டேப்பை சுற்றினர். பழனியம்மாள் அணிந்திருந்த 4 பவுன் தாலிக்கொடி, 2 அலைபேசிகளை பறித்துக்கொண்டதோடு, வீட்டில் இருந்த அரிதான இரிடியம் உலோகத்தையும் தூக்கிச் சென்றனர். வாயையும், முகத்தையும் செல்லோ டேப்பால் இறுக்கமாகச் சுற்றியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நடராஜனும், பழனியம்மாளும் இறந்தனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, கருமலைக்கூடல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்தக் கொலை, கொள்ளை தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கே.என்.பள்ளி பகிமனூரைச் சேர்ந்த ராஜா (31), பர்கூர் அம்பள்ளியைச் சேர்ந்த ரகு (38), கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள மடக்கள்ளியைச் சேர்ந்த பாபு (39), கவளக்கள்ளியைச் சேர்ந்த வினோத்குமார் (31), சரனு (39), ராமச்சந்திரப்பா (39), மாண்டியாவைச் சேர்ந்த நன்சி கவுடா (41) ஆகிய 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஈஸ்வரமூர்த்தி அக். 7 ஆம் தேதி தீர்ப்பளித்தார். கைதான 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், முதல் குற்றவாளியான ராஜாவுக்கு 11 ஆயிரம் ரூபாயும், மற்ற ஆறு பேருக்கும் தலா 16 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பத்மா ஆஜராகி வாதாடினார்.