பல வருடங்களாக வீடு இல்லாமல் மரத்தடியில் சமைத்துச் சாப்பிட்டு புத்தகம், துணிமணிகளைச் சாக்கு மூட்டையில் கட்டி பழைய வைக்கோல் பந்தலுக்காகப் போடப்பட்ட பட்டறையில் வைத்து பிளாஸ்டிக் தார்ப்பாய் போட்டு மூடி பாதுகாப்பதுடன் தன் உடைமைகளைக் கழிவறையில் வைத்து வாழ்ந்துவரும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கண்ணீர் வரவைக்கும் தகவல் குளமங்கலம் பாரதப் பறவைகள் மூலம் அறிந்து அந்த கிராமத்திற்குச் சென்று பார்த்ததை அப்படியே பதிவு செய்கிறோம்..
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ளது திருநாளூர் தெற்கு கிராமம். முழுமையாக விவசாயம் மட்டுமே அக்கிராம மக்களின் வாழ்வாதாரம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(45) விவசாயி. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி தனது முன்னோர்கள் கட்டிய பழைய பெரிய வீட்டில் வசித்து வந்தனர். அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் செல்வராஜின் மனைவி, அவரது கணவர் மற்றும் பச்சிளங்குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.
அதுவரை மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தில் பேரிடி விழுந்தது போல் ஆனது. 3 பெண் கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படி வளர்க்கப் போகிறோம் என்ற சிந்தனையிலேயே உறக்கத்தையும் உணவையும் மறந்த செல்வராஜின் மனநிலையும் குழம்பிப் போனது. குழந்தைகளுக்கு சமைத்து கொடுக்க தனது அத்தையை அழைத்து வந்து வைத்திருந்தவர் அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகளுக்கும் கல்வி தான் வாழ்க்கையைக் கொடுக்கும் என்பதால் கன்னியாகுமரியில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்த்துவிட்டவர் மாதம் ஒரு முறை போய் மகள்களைப் பார்த்து வந்தார்.
இந்த நிலையில்தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கஜா புயலையடுத்து பெய்த கனமழையில் குடியிருந்த மண் வீடும் இடிந்து கொட்டி தரைமட்டமானது. அதனால் பழைய வைக்கோல் பந்தலுக்காக அமைக்கப்பட்ட பட்டறையில் பிளாஸ்டிக் தார்பாய்களைப் போட்டு மூடி அதற்குள் பிள்ளைகளின் உடைகள், பாத்திரங்கள் எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு மரத்தடியில் சமைத்து சாப்பிட்டு அதே மரத்தடியில் தூங்கி வருகிறார்கள். முக்கியமான சில உடைமைகளை நனையாமல் இருக்க 2017-2018ல் அரசு கட்டிக் கொடுத்த கழிவறைக்குள் வைத்துப் பாதுகாத்தும் வருகின்றனர்.
விடுமுறையில் வீட்டுக்கு வரும் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளின் உடைமைகளும், உடைகளும் கூட கழிவறைதான் பாதுகாப்பு பெட்டகம் ஆனது. மழை பெய்தால் அந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம், கோயில் வராண்டாவில் தங்கும் செல்வராஜ் தனது அத்தையையும் குழந்தைகளையும் பக்கத்தில் உள்ள வீடுகளில் படுக்க வைத்திருப்பதை இன்றுவரை வழக்கமாகக் கொண்டுள்ளார். தன் பிள்ளைகள் ஊருக்கு வந்தால் இருக்கக் கூட இடமில்லை என்பதால் படிக்கச் சென்றால் நல்ல தங்குமிடம், உணவு கிடைக்கும் என்று விடுமுறைக்கு ஊருக்கு வருவதாகக் குழந்தைகள் சொன்னாலே அமைதியாகிவிடுகிறார் செல்வராஜ்.
மூன்று பெண் குழந்தைகளும் கன்னியாகுமரியில் உள்ள காப்பகத்தில் தங்கி அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வந்த நிலையில் மூத்த பெண் +2 முடித்து நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேசன் மூலம் உதவி பெற்று சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார். இரண்டாவது குழந்தை இந்த வருடம் +2 முடித்துவிட்டு மேல் படிப்பிற்கு பணவசதி இல்லாததால் அதற்கான பணத்தை சேமிக்க கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஒரு வருடம் வேலை செய்து சேமிக்கும் பணத்தில் அடுத்த ஆண்டு கல்லூரியில் சேர தயாராகி வருகிறார். மூன்றாவது குழந்தை தற்போது புதுக்கோட்டையில் ஒரு அரசுப் பள்ளியில் +1 கம்பியூட்டர் சைன்ஸ் சேர்ந்து மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
நாம் சென்ற போது செல்வராஜ் குடும்பம் குடியிருப்பதாகச் சொன்ன அந்த இடத்தை காணவே வேதனையாக இருந்தது. புளியமரத்தடியில் பாட்டியும் பேத்திகளும் பனை ஓலைகளை வைத்து தீ மூட்டி சமைத்துக் கொண்டிருந்தனர். சுற்றிலும் நேற்று முன்தினம் பெய்து தேங்கிய மழைத்தண்ணீர். தேங்கிய சேரும் சகதியும், ஈரமும் காயவில்லை. சுற்றிலும் மழையால் நனைந்ந துணிகளைக் காயவைத்திருந்தனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள செல்வராஜ் அறந்தாங்கி அரசு மருத்துவமனை சென்றிருந்தார்.
அந்த சூழ்நிலையிலும் நம்மை அன்போடு அழைத்த முதல் மற்றும் 3 வது பெண் குழந்தைகள் விடுமுறைக்காக எங்க அப்பாவைப் பார்க்க ஊருக்கு வந்தோம் என்றவர்களிடம் நாம் பேச்சுக் கொடுத்த போது, பல வருசமா இந்த மரத்தடி தான் எங்க வீடு. பல வருசத்துக்கு முன்னால எங்க வீட்டில் நின்ற மாடுகளுக்காகப் போடப்பட்ட வைக்கோல் பட்டரையில் தார்பாயை போட்டு புத்தகம், துணிமணிகளை சாக்குல கட்டி வைத்திருக்கோம். மற்ற பொருட்களை டாய்லெட்ல வச்சிருப்போம் என்று சொல்லும் போது கண்கள் கலங்கியது. வெயில், காத்து, மழை எதுன்னாலும் எங்கப்பா இங்கே தான் கிடப்பார். இல்லன்னா கோயில், பள்ளிக்கூடம், கடைகள்லன்னு எங்கேயாவது தூங்குவார். நாங்க எங்க பக்கத்தில் உள்ள வீட்டில் தங்கிக்குவோம் என்றார் கண்களைத் துடைத்துக் கொண்டு. மேலும், படிப்பு தான் முக்கியம் நீங்க நல்லா படிக்கனும்னு எங்களை காப்பகத்தில் சேர்த்து இன்று வரையும் படிக்க வைக்கிறார். எங்களுக்குன்னு ஒரு வீடு கட்டிக் கொடுத்தால் போதும் எங்க அப்பாவும் பாட்டிம் ஒரு வேலை சோறு சாப்டாலும் நிம்மதியா தூங்குவாங்க. நாங்களும் மனநிறைவோடு படிப்போம் என்றனர்.
பாரதப் பறவைகள் புஸ்பராஜ் நம்மிடம், “இப்படி ஒரு குடும்பம் இருப்பதைப் பற்றி சிலர் சொன்னவுடன் பாரதப் பறவைகள் அமைப்பினர் வந்து பார்த்ததும். ரொம்ப மனசு கஸ்டமாகிடுச்சு. உடனே எங்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு ஆஸ்பெட்டாஸ் கொட்டகை அமைக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். ஆனால் தமிழ்நாடு அரசும், இது போல கஷ்டப்படுவோருக்கு உதவும் நல்ல எண்ணம் படைத்த நல் உள்ளங்களும் உதவினால் இந்த குடும்பத்திற்கு நீண்டகாலத்திற்கான நல்ல வீடாக கட்டிக் கொடுக்கலாம்” என்றார்.
கருணை உள்ளம் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மனது வைத்தால் இந்த மரத்தடியிலும், கழிவறையிலும் வாழும் குடும்பத்தை நல்ல வீட்டில் குடியமர்தலாம். அதே போல அந்த குடும்ப தேவையறிந்து நல்ல உள்ளங்கள் உதவினால் அந்த பெண் பிள்ளைகள் நன்றாகப் படித்து உயர்வார்கள்.