இன்று (04.05.22) 3.5 சதவீத எல்.ஐ.சி பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விருதுநகர் கிளையிலும் எல்.ஐ.சி ஊழியர்கள் காலை 11.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை இரண்டு மணி நேரம் வேலை நிறுத்த வெளிநடப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.
விருதுநகர் கிளையின் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தினர், எல்.ஐ.சி. அலுவலகம் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், “வியாபாரிகள்தான் ஆடித்தள்ளுபடி போடுவாங்க. ரெண்டு வாங்கினா ஒண்ணு ஃப்ரீன்னு. அதுமாதிரிதான் நடக்குது. அடிமாட்டு விலைக்கு எல்.ஐ.சி. பங்குகளை விற்பதற்குத் திட்டம் போட்டிருக்காங்க. எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்பது குறித்து மல்கோத்ரா கமிட்டி எப்போது முடிவெடுத்ததோ, அன்றிலிருந்து போராடிக்கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட, 30 ஆண்டுகள் கழித்தும் போராடுகிறோம். எல்.ஐ.சி. பங்குகள் விற்பனைங்கிறத எளிமையாச் சொல்லணும்னா, எல்.ஐ.சி.யை விற்கப்போறாங்கன்னு சொல்லுறதுதான். தொடர்ச்சியாக நம்பிக்கையோடு போராடிக்கொண்டிருக்கிறோம்.” எனப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது “கண்டிக்கிறோம்.. கண்டிக்கிறோம்.. தனியாருக்கு எல்.ஐ.சி. பங்குகளைத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவினைக் கண்டிக்கிறோம்!” எனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.