செய்யாறு மேல்மா சிப்காட் திட்டம் நிச்சயமாக தமிழக அரசால் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார் .
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ''பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் அடிப்படையில் மருத்துவர்கள். எனவே அவர்களுக்கு விவசாயிகளின் சிரமங்கள் பற்றி எதுவும் தெரியாது. ராமதாஸும் அன்புமணி ராமதாஸும் ஊருக்கு ஒவ்வொரு பேச்சு பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேல்மா சிப்காட் அமைப்பதற்கான நிலம் எடுக்கும் பணிகள் தற்பொழுது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நிச்சயமாக இந்த சிப்காட் திட்டம் கொண்டுவரப்படும். மேல்மா கூட்டுரோடு பகுதியில் அரசின் சார்பாக நிலம் எடுக்கும் அத்தனை பணிகளும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. விவசாயிகள் சட்டமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்த்து எப்பொழுது எங்களுக்கு பணம் வாங்கி தருவீர்கள் எப்பொழுது பணம் வாங்கி தருவீர்கள் என இரண்டு பேர் வீட்டுக்கு விவசாயிகள் போய்க்கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு உரிய பணத்தை, உரிய பணம் என்பதை விட கூடுதலான பணத்தை அரசாங்கம் கொடுத்து நிலத்தை கட்டாயம் வாங்கும். திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட்டுக்கு நிலங்களை எடுக்கத்தான் செய்வோம். விவசாயப் பெருங்குடி மக்களை வஞ்சிக்க வேண்டிய எண்ணம் திமுகவுக்கு என்றும் இருந்தது கிடையாது. விளைகின்ற நிலத்திற்கு என்றைக்கும் தமிழ்நாட்டு முதல்வர் உந்து சக்தியாக தான் இருக்கிறார்'' என்றார்.