சென்னை குன்றத்தூர் அருகே தனியார் கல்லூரியின் பேராசிரியர் வீட்டின் கழிவறையில் தலையில் பாலித்தீன் கவர் சுற்றப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகார் குமார் கர்வார். இவர் குன்றத்தூரில் ஒரு கல்லூரியில் மெக்கானிக்கல் துறையில் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மதுரவாயல் பகுதியில் உள்ள வக்கீல் தோட்டம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த நான்கு மாதமாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு உத்தரபிரதேசத்தில் உள்ள அவருடைய மனைவி தொலைப்பேசியில் அழைக்க முயன்றுள்ளார். ஆனால் செல்போன் அழைப்பு எடுக்கப்படாததால் உடன் பணிபுரியும் நபர்களுக்கு தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மதுரவாயல் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்ட.து. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற பொழுது அவர் தங்கியிருந்த வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பின்பக்க கதவு திறந்து கிடந்தது. அதன் வழியாக உள்ளே சென்று பார்த்த பொழுது கழிவறையில் அரை நிர்வாண நிலையில் முகம் மட்டும் பாலித்தீன் கவரால் சுற்றப்பட்ட நிலையில் பிரகார் குமார் கர்வார் சடலமாக கிடந்தார். உடனடியாக உடலை மீட்ட போலீசார் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.