சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டைக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை 3வது முறையாக ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றும் போது, “சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் இன்று நாம் அடிக்கடி காணக்கூடிய காட்சி ஒன்று. ஓலா, ஊபர், ஸ்விகி, ஸொமட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாகச் சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதைக் காணலாம். நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது. அவர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து இணைய வழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் உணவு விநியோகம் மற்றும் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களான கிக் (Gig) தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில் தனியே நல வாரியம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தமைக்காக, ஓலா, ஊபர், ஸ்விக்கி, ஸொமாட்டோ, டன்ஸோ, ஸெப்டோ போன்ற இணைய வழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று சந்தித்து தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன். தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அமைப்புசாராத கிக் (Gig) தொழிலாளர்களின் நலன் காக்கத் தனி நல வாரியம் அமைக்கப்படும் என விடுதலை நாள் உரையில் அறிவித்தமைக்குப் பல தரப்பினரும் உளமாரப் பாராட்டி நவிலும் நன்றியால் நெகிழ்கிறேன். கை ரிக்ஷா தொழிலாளர்கள், குடிசை வாழ் மக்கள் என கோட்டையில் இருந்தாலும் எளிய மக்களின் நலனையே எண்ணித் திட்டங்கள் தீட்டிய கலைஞரின் நூற்றாண்டில் இத்தகைய அறிவிப்பை வெளியிடும் வாய்ப்பு கிட்டியது நான் பெற்ற பேறு. உழைப்போரை உயர்த்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.