8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுகவிற்கு 125 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 4 மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன் போன்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யவில்லை. மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் பாதியளவு (118) இருந்தாலே சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்ற நிலையில் 125க்கும் மேற்பட்டோர் இருந்தது மசோதா நிறைவேறக் காரணமாக அமைந்தது. பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் சிபிஎம், சிபிஐ, அதிமுக, விசிக, நாம் தமிழர் உள்ளிட்ட பல கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந்த சட்ட மசோதாவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ''சிலர் 12 மணிநேரம் விருப்பப்பட்டு வேலை செய்பவர்கள் இருப்பார்கள். அதனால் இது கட்டாயப்படுத்தப்படவில்லை என்பது ஆரோக்கியமான ஒன்று. விருப்பப்படுபவர்கள் அவர்களது தொழிலுக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளலாம். விருப்பப்பட்டு எடுத்துக்கொள்ளலாம் எனக்கூறிவிட்டு கட்டாயப்படுத்தக் கூடாது. எனவே இதனை தொழிலாளர்கள் விருப்பத்திற்கே விட்டுவிடலாம் என்பது எனது கருத்து'' என்றார்.