
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த ஸ்போராக் விளையாட்டு விழாவில் கேலரி சரிந்து 34 மாணவிகள் உள்ளிட்ட 36 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழக மற்றும் புதுச்சேரி வேளாண் கல்லூரிகளுக்கிடையேயான ஸ்போராக்-2018 விளையாட்டு போட்டிகள் துவக்கவிழா வியாழக்கிழமை நடந்தது. இவ்விளையாட்டு போட்டிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 23 வேளாண் கல்லூரிகளிலிருந்து 200 மாணவிகள் உள்ளிட்ட 750 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகள் துவங்கின நடந்துகொண்டிருந்தது. விளையாட்டு போட்டிகளை மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்காந்து பார்ப்பதற்காக மரப்பலகையினாலான கேலரி அமைக்கப்பட்டிருந்தது.
போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது கேலரியில் அமர்ந்து விளையாட்டு போட்டிகளை பார்த்துக் கொண்டிருந்த மாணவிகள் உற்சாகத்துடன் எழுந்து நின்றுள்ளனர். இதனால் கேலரி சரிந்தது. இதில் அண்ணாமாலைப்பல்கலை கழக வேளாண்புல மாணவிகள் பவித்ரா(20), தமிழரசி(20), திவ்யா(20,மோகன்சூரியா(20), சோபியா(20) கிருஷ்ணகியை சேர்ந்த மீனாட்சி, தரும்புரி சுப்புலட்சுமி உள்ளிட்ட 34 மாணவிகள் உள்ளிட்ட 36 பேர் படு காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
- காளிதாஸ்