திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்:
’’என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் ஈரோடு மாநாட்டு மூன்றாவது அழைப்பு மடல்.
திருவிழா காண்கிற கிராமத்து எளியவர் போல, தித்திக்கும் தின்பண்டம் தேடும் சிறு குழந்தை போல, எத்திக்கும் புகழ் மணக்கும் தமிழை என்றும் காணும் என்னரும் புலவர் போல, எந்நாளும் உதயசூரியன் காணும் கீழ்த்திசை வானம் போல, எழுச்சி முகம் காட்டும் ஈரோடு மண்டல மாநாட்டில் உங்கள் அனைவரையும் காணும் பேராவலுடன் காத்திருக்கிறேன். இந்தக் கடிதத்தை நீங்கள் காண்கின்ற வேளையில், மாநாட்டிற்குப் புறப்பட குடும்பத்தாரோடு ஆயத்தமாகிக் கொண்டிருப்பீர்கள்.
கழக மண்டல மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி அவர்கள் தலைமையில்,மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவட்டக் கழகங்களின் 15 செயலாளர்கள்தம் அயராத உழைப்பு, மாநாடு பிரகடனம் செய்யப் போகும் மாபெரும் வெற்றியை இப்போதே மாநிலத்திற்குப் பறைசாற்றுகிறது.
இலட்சோப இலட்சமெனக் குவியவிருக்கும் கழகத் தொண்டர்களின் வருகையினை எதிர்பார்த்து அவர்கள் தங்குவதற்காக விடுதிகள், மண்டபங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதுடன், மாநாட்டு வளாகத்திலும் போதுமான அளவில் வாகனம் நிறுத்தும் இடம், கழிப்பிடங்கள், பெண்களுக்கான தனி வசதிகள் ஆகிய தேவைகளை உருவாக்கி அவற்றையெல்லாம் முறைப்படுத்த கழகத் தொண்டரணியினரைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பல மாவட்டங்களிலிருந்தும் வருகிற ஒவ்வொரு தோழரும் வசதியாக இரண்டு நாள் மாநாட்டினில் மகிழ்வுடன் பங்கேற்றிடும் வகையில் மேற்கு மண்டல கழக நிர்வாகிகள் வேகமாகவும் விவேகத்துடனும் பணியாற்றி வருவது போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.
சொந்த அலுவல்களை முடித்து வைத்துவிட்டு, இலட்சியம் காக்கும் இயக்கப் பணிக்காகத் தனியே புறப்படுகிறவர்கள் இருப்பீர்கள். கழகம் என்பதே நம் குடும்பம் என்ற உணர்வுடன் சொந்தம்-சுற்றம் சூழப் புறப்பபடுகிறவர்கள் இருப்பீர்கள். அருகில் உள்ள உடன்பிறப்புகளையும் தோளோடு தோள்சேர்த்து அரவணைத்துக்கொண்டு ஒன்றாகப் பயணிக்கிறவர்கள் இருப்பீர்கள். உங்கள் அத்தனை பேரின் திருமுகம் கண்டு அகம் மலரும் அந்த இரண்டு நாட்கள் நெருங்கி வருவதை நினைக்கையில் நெஞ்சம் இனிக்கிறது; எண்ணமெல்லாம் மணக்கிறது. அந்த இனிப்பின் சுவை இதயத்தில் சுழன்று நிலைத்திருக்கும் வகையில், உங்கள் பயணம் உரியகவனத்துடனும் சரியான பாதுகாப்புடனும் அமைக்கப் படவேண்டும் என உங்களில் ஒருவனாகத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொள்கிறேன்.
ஈரோடு-காஞ்சி-திருக்குவளை, இந்த மூன்று திருத்தலங்களையும் மனக்கண்களால் நோக்கித்தான் நாம் ஒவ்வொரு நாளும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். வாகனத்தில் அல்ல.. இலட்சியத்தில். இந்த முறை வாகனத்தில் பயணிக்கும் வழி, நெடுஞ்சாலையாக அமையும். தமிழ்நாட்டில் நான்கு வழிச்சாலைகளை விரைந்து நிறைவேற்றக் காரணமாக அமைந்தது தி.மு.கழகம் என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தெரியும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தி.மு.கழகம் பங்கேற்றிருந்ததன் விளைவாக, தலைவர் கலைஞர் அவர்களின் உந்துதலால், மத்திய அமைச்சராக இருந்த சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களின் தீவிரச் செயல்பாட்டால், டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடனடியாக நிதி ஒதுக்கி, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் வேகமாக நிறைவேறியது. அதன் காரணமாக இன்று வாகனங்கள் விரைந்து செல்கின்றன. பயணநேரம் குறைந்துள்ளது. அதே நேரத்தில், அதிவேகம் என்ற பெயரால் ஆபத்தை விலைக்கு வாங்குவோரும் இருக்கிறார்கள். கழகத்தினர் அதனைக் கடைப்பிடிக்க வேண்டாம். விரைந்து பயணிப்பதைக் காட்டிலும், பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு மாநாட்டுக்கு பத்திரமாக வந்து திரும்பிட வேண்டும் என்பதுதான் உங்களில் ஒருவனான என்னுடைய அன்பு வேண்டுகோள்.
அரசியல் களத்தில்கூட கழகம் அதிவேகம் காட்டிட அவசரப்படாமல், அறமும் அமைதியுமான ஜனநாயக வழியில் பயணித்துக் கொண்டிருப்பதையும் அதன் இலக்கை அடையும் நேரம் நெருங்கி வருவதையும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் அறிவீர்கள். நாம் என்றைக்கும் குதிரை பேரம் நடத்துபவர்களல்லர். கொள்கையை நெஞ்சில் விதைத்து அது தமிழ்ச் சமுதாயமெங்கும் நல்விளைச்சல் தந்திட வேண்டும், அதனை அடுத்தடுத்த தலைமுறையினரும் அறுவடை செய்திட வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் நடைபெறும் கழகத்தின் மண்டல மாநாட்டில், அந்தக் கொள்கை முரசமான திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சி முன்கூட்டியே திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ-மாணவியர் நாள்தோறும் ஆர்வத்துடன் வந்து கண்காட்சியினைப் பார்த்து, நூறாண்டு கால திராவிட இயக்கத்தின் தியாக வரலாற்றுப் பாடத்தைக் கற்கிறார்கள். தங்கள் முன்னோர் இந்த சமுதாயத்தில் எந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதையும் திராவிட இயக்கக் கொள்கைகளால் இன்று எந்தளவுக்கு நாம் நிமிர்ந்திருக்கிறோம்-உயர்ந்திருக்கிறோம் என்பதையும் கண்காட்சி வாயிலாகக் கற்பதுடன், நாம் இந்த சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய பொதுநலச் சேவைகள் என்ன என்பதற்கான விழிப்புணர்வினையும் பெறுகிறார்கள்.
மாநாட்டுப் பந்தலில் குவிந்திடும் ஆர்வத்துடன் வரக்கூடிய கழகத்தினர் அனைவரும் இந்தக் கண்காட்சியை அவசரப்படாமல் அவசியம் பார்த்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தாழ்ந்து கிடந்த தமிழ்ச் சமுதாயம் தலை நிமிர்ந்திடும் வகையில் தன்மான உணர்ச்சி ஊட்டிய தந்தை பெரியாரின் ஈரோட்டு மண்ணில் நாம் கொள்கை முழக்க மாநாடு நடத்தும் நிலையில், தமிழ்நாட்டு எல்லை வழியாக மதவெறி விதைகளைத் தூவிடும் ரதயாத்திரை அனுமதிக்கப்படுகிறது. அதன் பக்கவிளைவாக, புதுக்கோட்டையில் தந்தை பெரியாரின் சிலை துண்டிக்கப்படுகிறது. அண்ணாவின் பெயரால் கட்சி நடத்திக்கொண்டு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட மாநில ஆட்சியாளர்கள் மண்ணுக்குள் தலை புதைத்து மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். மத்திய ஆட்சியாளர்கள் மதவெறித் தீயை விசிறிவிடுகிறார்கள். கண்முன்னே சவால்கள் முளைத்துள்ள நேரத்தில்தான், மத்திய-மாநில அரசுகளை ஜனநாயக வழியில் வீழ்த்திடச் சூளுரைக்கும் வகையில் மண்டல மாநாடு சிறப்புடன் நடைபெறவிருக்கிறது.
மார்ச் 24, 25 ஆகிய இரு நாட்களும் கழகத்தின் கொள்கை முழங்கும் கோலாகலத் திருவிழா. கோட்டை போன்ற முகப்பு கொண்ட பந்தலின் முன்னே ஏற்றமிகு இருவண்ணக் கொடி வானுயர்ந்து பறக்கும். பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாளர்கள் ஆற்றும் உரைகள் யாவும் இலட்சியப் பாடம். தமிழகத்தையும் இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் நிறைவேற்றப்படவிருக்கின்ற தீர்மானங்கள்; அவற்றை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டங்கள் என ஈரோடு மண்டல மாநாடு அனைத்து வகையான அரசியல் மாற்றத்திற்கும் தயாராகிவிட்டது.
இது நமதுமக்கள் நலனுக்கான மாநாடு. அதன் நோக்கத்தை நிறைவேற்றித் தரவேண்டிய கடமை தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்தப் பொறுப்புணர்வுடன் மாநாட்டு அரங்கில் கூடிடுவோம்!தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் நல்ல மாற்றத்தை உருவாக்கிடுவோம்! உங்களில் ஒருவனாக உவகையுடன் அழைக்கிறேன்! உங்கள் அன்பு முகம் காண உள்ளத்தில் உணர்ச்சிபொங்கிட கனிந்துவரும் ஆவலுடன் காத்திருக்கிறேன்!’’