Skip to main content

''வடக்கு இந்திய கம்பெனியை எதிர்ப்போம்''- ஈரோட்டில் கமல்ஹாசன் பேச்சு

Published on 19/02/2023 | Edited on 20/02/2023

 

 Let us oppose the North India Company...- Kamal Haasan speech at Erode

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 19 ந் தேதி மாலை ஈரோட்டில் பிரச்சாரம் செய்தார். 

 

அப்போது அவர் பேசும்போது, "உயிரே, உறவே தமிழே வணக்கம். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் இங்கு போட்டியிடும்  ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து நான் ஓட்டு சேகரிக்க வந்துள்ளேன். இன்னொரு சின்னத்திற்கு நான் வாக்கு கேட்டு மக்கள் பார்த்து இருக்க மாட்டீர்கள். ஆபத்து காலத்தில் இதெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. சின்னம், கட்சி கொடி இதெல்லாம் தாண்டி நமது தேசம் காக்க வேண்டும். அப்படி வரும்போது யாருடன் கை கோர்க்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஜனநாயகம் என்பது உலகம் ஏற்றுக்கொண்ட அபாயமற்ற வழி என்று நம்பிவிட முடியாது.

 

ஜனநாயகத்தின் வழியாகவும் சர்வாதிகாரம் நம்மை ஆட்கொள்ள முடியும் என்பதற்கான சான்றுகள் உலகில் உள்ளன. இன்று அதுதான் இந்தியாவில் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. அதன் காரணமாக, அறத்தின் காரணமாக நான் இங்கே வந்திருக்கிறேன். இதுபோக எங்களுக்குள் உறவு இருக்கிறது. அவரும் (ஈவிகேஎஸ் இளங்கோவன்) பெரியாரின் பேரன் தான். நானும் பெரியாரின் பேரன் தான். காந்தியிடம் போய் நான் காந்தியின் கொள்ளுப்பேரன் என்கிறார், பெரியாரிடம் போய் அவரின் பேரன் என்று நினைத்து விடாதீர்கள். பெரியார் காந்தியாரின் தம்பி. வெவ்வேறு கருத்துகள், வெவ்வேறு கொள்கைகளாக இருந்து இருக்கலாம். நான் இந்த மாதிரி கூட்டத்தில் இருந்து இவங்க தாத்தா பெரியார் பேசிய பேச்சை கேட்டு வளர்ந்த பிள்ளை. அதனால் விட்டுப்போன ஒரு கடமையைச் செய்ய இங்கு வந்திருக்கிறேன்.

 

 Let us oppose the North India Company...- Kamal Haasan speech at Erode

 

விஸ்வரூபம் என்று ஒரு படம் எடுத்தேன். அப்போது என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார். அப்போது கலைஞர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பயப்படாதே. உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டர். நான் வேண்டாம் ஐயா. இது என் பிரச்சனை. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலினும் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார்கள். அப்போது சுயநலத்திற்காக நான் கூட்டணி வைக்கவில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன். விட்டுவிடுங்கள் என்று சொல்லி விட்டேன். அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு, என் கடனையெல்லாம் அடைத்து, இப்போதும் எந்த லாபமும் எதிர்பார்க்காமல் இங்கு வந்துள்ளேன்.

 

நம் நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இங்கு வந்திருக்கிறேன். அதற்கு முன்னோடி வேலைகளைப் பார்த்த ஒரு கட்சியின் வேட்பாளரான இளங்கோவனுக்கு என் ஆதரவைக் கொடுப்பது ஒரு இந்தியனின் கடமை. நாம் அனைவரும் இந்தியர்கள் தான். இப்படித்தான் நாடு செல்ல வேண்டும் என்று நிர்ணயிக்கும் ஒரு பலம் உங்களிடம் இருக்கிறது. ஒரு கட்சிக்காக அல்லாமல், அறத்தின் சார்பாக வாக்களிக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

நாட்டிற்கு நல்லது செய்வதற்காக வாக்களிக்கிறோம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, நல்லதை நோக்கி, அறத்தை நோக்கி நாம் நகர வேண்டும். அப்படி நகரும் கூட்டணியாக இது இருக்க வேண்டும். விமர்சனங்களை பிறகு பார்த்துக் கொள்வோம். இந்த கூட்டத்துடன் இருப்பது எனக்கு பெருமை. சுதந்திர போராட்டத்தில் கிழக்கிந்தியை கம்பெனியை எதிர்த்து இந்தியர்கள் போராட்டம் நடத்தினோம். இப்போது தென்னாட்டில் குறிப்பாக தமிழகத்தில் இந்தியாைவை ஆளும் அரசை எதிர்த்து அதாவது வடக்கு இந்திய கம்பெனிையை (பாஜக தலைமையிலான மோடி அரசை) எதிர்த்து போராட்டம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

 

என் தொண்டர்கள் காரணம் கேட்காமல், வந்து நில் என்று சொன்ன இடத்தில் வந்து நிற்பார்கள். கொள்கைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, மக்களின் நலன் என்று வரும்போது, எது நியாயமோ, அதைச் செய்வதுதான் எங்கள் லட்சியம். இந்த பேச்சு ஒத்திகையால் வந்தது அல்ல. நான் யோசித்து விட்டுதான் இங்கு பேசுகிறேன். பல விமர்சனங்களைக் கேட்டுவிட்டுத்தான் இது சரியான பாதை என்று தேர்ந்தெடுத்து வந்துள்ளேன். என் பயணத்தை பார்த்தால், பாதை புரியும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்