கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.
கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.
இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் தோகர் கூறுகையில், 'கண்காணிப்பு பதிவை மட்டும் வைத்து அரியலூரில் காணப்பட்டது மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த அதே சிறுத்தையா என்பதை உறுதிப்படுத்த முடியாது. அதனுடைய தெளிவான புகைப்படம் கிடைக்க வேண்டும். இரண்டு சிறுத்தைகளின் புகைப்படம் மற்றும் வேறு சில தடையங்களை ஒப்பிட்டுப் பார்த்துதான் இரண்டும் ஒரே சிறுத்தையா என்பதை உறுதி செய்ய முடியும்' என தெரிவித்துள்ளார்.
தற்பொழுது வரை மயிலாடுதுறையில் நான்கு கூண்டுகள் 20க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் அரியலூரில் இரண்டு கூண்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.