மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
தொடர்ந்து ஐந்தாவது நாட்களாக அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை தேடுதல் வேட்டையில் முதல் நாள் கேமராவில் சிக்கிய அந்த சிறுத்தை இரண்டாவது நாள் சிக்கவில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை மொத்தம் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாப்பாளர் நாகநாதன் தலைமையிலான துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய சிறுத்தையின் புகைப்படத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருந்தது. மஞ்சளாறு, மறையூர், மகிமலையாறு, ஆரோக்கியநாதபுரம் பகுதி ஆகிய பகுதிகளில் 7 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டு தீவிரமாக சிறுத்தையை பிடிக்கும் முயற்சி ஐந்தாவது நாளாக தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே 16 தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் 30 கேமராக்கள் பொருத்துப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.