திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 110வது பிறந்த நாள் விழா மற்றும் இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இழைக்கப்பட்ட துரோகத்தை கண்டித்து ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உள்பட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேசும்போது... ’’காலம் முழுவதும் கலைஞரை எதிரியாக கொண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது தான் அ.தி.மு.க. ஆகும். அதன் வழியில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தற்போது சிறப்பாக ஆட்சி புரிந்து வருகின்றனர். ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கு கடந்த 2008-ம் ஆண்டு பெங்களுருவில் நடந்துகொண்டு இருந்தபோது, அவர் எப்படியும் சிறைக்கு சென்றுவிடுவார். நாம் முதல் அமைச்சர் ஆகிவிடலாம் என்று அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் பேசியுள்ளனர். இதற்கான ஆதாரம் ஜெயலலிதாவின் கையில் கிடைத்ததை அடுத்து அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களை கட்சியை விட்டே ஒதுக்கி வைத்தார்.
கலைஞர் ஆட்சியில் 1996ம் ஆண்டு டி.டி.வி. தினகரன் லண்டனில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் சொத்து வாங்கினார். அதுகுறித்த வழக்கில் ஜெயலலிதாவும் சேர்க்கப்பட்டார். அதையடுத்து டி.டி.வி. தினகரன் கலைஞரை சந்தித்து இந்த வழக்கில் இருந்து என்னை மட்டும் விடுவித்துவிட்டு, வழக்கை வேமாக முடித்துக் கொடுங்கள் என்று கூறினார். இதையடுத்து கலைஞர்தான் அந்த வழக்கில் இருந்து டி.டி.வி. தினகரனை விடுவித்து ஜெயலலிதாவுக்கு தண்டனை வாங்கி கொடுத்தார். இதனால் கலைஞரை விட டி.டி.வி.தினகரன் தான் ஜெயலலிதாவுக்கு துரோகி ஆனார். தற்போது அவர் 18 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு மு.க.ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து இந்த ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறார்.
அ.தி.மு.க.வின் எதிரியான தி.மு.க.வுடன் டி.டி.வி. தினகரன் உடன்படிக்கை போட்டுள்ளார். இதனால் அவர் பக்கம் சென்றவர்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதாவுக்கு இந்த நிலை ஏற்பட காரணம் முழுவதும் டி.டி.வி தினகரன்தான். அவர் எங்களை பார்த்து ஊழல்வாதி என்கிறார். ஊழலின் தலைவரே டி.டி.வி. தினகரன் தான். கட்சியில் 98 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். டி.டி.வி. தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு தேர்தலை சந்தித்து இருந்தால் அவருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்று வைத்து கொள்ளலாம். தற்போது நடைபெறும் ஆட்சியை கட்சியை கலைத்து விட்டு கட்சியை கைப்பற்ற டி.டி.வி. தினகரனும், ஆட்சியை கைப்பற்ற மு.க.ஸ்டாலினும் திட்டமிட்டுள்ளனர் என்று கூறினார்.
அதன்பின் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது... ‘’தற்போது டிடிவி தினகரன் ஒரு இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவருடைய உறவினர்கள் மொத்தம் 10 கட்சியை தொடங்கி உள்ளனர். இது பணத்தை கொள்ளையடிப்பதற்காக தான். தீபா ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறார். அதன் நிலை எப்படி உள்ளது என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல தான் டி.டி.வி. தினகரன் தொடங்கிய கட்சிக்கும் நடக்கும். எம்.ஜி.ஆரின் புகழை பரப்பும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. வருகிற 30ம் தேதி சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.
கலைஞருடன் சேர்ந்து ஜெயலலிதாவை காட்டிக்கொடுத்து துரோகம் செய்தவர் டி.டி.வி. தினகரன். அவரை நம்பி அந்த பக்கம் சென்றவர்கள், நியாயத்தை நினைத்து பார்த்து நம்முயை கழகத்தில் இணயை வேண்டும். நடைபெற உள்ள திருப்பங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ஒரு லட்சம் வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் தி.மு.க. செய்த உதவிக்கு நன்றி என்று ராஜபக்சே சமீபத்தில் கூறினார். இதனால் தமிழ் பெண்களை கற்பழித்து கொன்றுகுவித்த இலங்கை அரசுக்கு துணை நின்ற தி.மு.க.வை மத்திய அரசு தண்டிக்க வேண்டும். கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. முன்னாள் முதல் அமைச்சர் ஜானகி இறந்தபோது, அவரை எம்.ஜி.ஆரின் அருகில் அடக்கம் செய்ய இடம் கேட்டோம். ஆனால் அப்போது முதல் அமைச்சராக இருந்த கலைஞர் தான் முன்னாள் முதல் அமைச்சர்களுக்கு மெரினாவில் இடம் கிடையாது என கூறினார். ஆட்சியையும், அ.தி.மு.கவையம் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது’’ என்று கூறினார்.
ஆனால் கூட்டம் தொடங்கிய உடனே மழை பெய்ததால் கூட்டத்திற்கு வந்த பெரும்பாலான மக்கள் கூட்டத்திலிருந்து வெளியேறி விட்டனர். அப்படியிருந்தும் ஒரு சில மக்களே சேர்களை குடையாக பயன்படுத்திக்கொண்டு அமைச்சர்கள் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்தனர். அதை தொடர்ந்து திடீரென உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கூட்டத்திற்கு வந்தார். அவரை அமைச்சர் சீனிவாசன், வேலுமணி ஆகியோர் வரவேற்றனர். அதன்பின் மாவட்ட கழகம் சார்பாக நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி கண்டனத்தை தெரிவித்தனர்!