தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நிலுவையில் உள்ள சட்ட முன்வடிவுகள் எவை? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இரண்டு முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. முதல் முறை ஆளுநர் சட்ட முன்வடிவைத் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் விலக்கு சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, கடந்த பிப்ரவரி 8- ஆம் தேதி அன்று மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்கும் சட்ட முன்வடிவு கடந்த ஜனவரி 12- ஆம் தேதி அன்று ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதுவும் நிலுவையில் உள்ளது.
அதேபோல், பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் சுயநிதி கல்லூரிகளில் இருந்து ஐந்து உறுப்பினர்களைச் சேர்ப்பது தொடர்பான, சட்ட முன்வடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் 20- ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பட்ட நிலையில், அது நிலுவையில் உள்ளது.
தமிழக மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் சட்ட முன்வடிவு, கடந்த ஜனவரி 13- ஆம் தேதி அன்று ஆளுநருக்கு அனுப்பட்ட நிலையில், பரிசீலிக்கப் படாமல் நிலுவையில் உள்ளது. மாநில சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று சில சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பான, சட்ட முன்வடிவு கடந்த ஜனவரி 13- ஆம் தேதியும், தமிழக கால்நடை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் சட்ட முன்வடிவு கடந்த ஜனவரி 18- ஆம் தேதியும், டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளில் பொதுத் தமிழை ஒரு பாடமாகச் சேர்ப்பதற்கான சட்ட முன்வடிவு கடந்த 2020- ஆம் ஆண்டு ஏப்ரல் 4- ஆம் தேதியும், கூட்டுறவுச் சங்கத்தில் இயக்குனர் குழுவை இடைநீக்கம் செய்தால் உடனடியாக நிர்வாக அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் கொண்ட சட்ட முன்வடிவு கடந்த 2020- ஆம் ஆண்டு செப்டம்பர் 24- ஆம் தேதியும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இதே சமயம், ஆளுநர் வசம் நிலுவையில் இருந்த சில சட்ட முன்வடிவுகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தை, அண்ணா தொழில் நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகப் பெயர் மாற்றம் செய்வதற்கான சட்ட முன்வடிவு, அண்ணா பல்கலைக்கழக திருத்தச் சட்ட முன்வடிவு மற்றும் சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்கும் தேர்வுக் குழு தொடர்பான சட்ட முன்வடிவு ஆகியவை ஆளுநரிடம் நிலுவையில் இருந்த நிலையில், அதனை தமிழக அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.