ரஷ்யாவின் அனபா நகரில் நடைபெற்ற உலக கிக்பாக்சிங் போட்டிகளில் சென்னையைச் சேர்ந்த மாணவர் வசீகரன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அனபா நகரில் நடைபெறும் உலக கிக்பாக்சிங் போட்டிகளில் இந்தியா உள்ளிட்ட 55 நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து மட்டும் 39 வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டிகளின் 79 கிலோ பிரிவில் சென்னை லேடி ஆண்டாள் பள்ளி மாணவர் வசீகரன் (வயது 14) தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் மாநில, மண்டல, தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பலமுறை வெற்றி பெற்று பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பா.ம.க.வைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பாலுவின் இளைய புதல்வர் ஆவார்.
இதே போட்டிகளின் 55 கிலோ எடைப்பிரிவில் சென்னை பப்ளிக் ஸ்கூல் மாணவர் அருண் தனிஷ்க் (வயது17) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர்கள் இருவரும் சென்னை அண்ணா நகரில் உள்ள ஸ்பிட் ஃபயர் கிக்பாக்சிங் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்சிங் சங்கத்தின் பொதுச்செயலாளரும், இந்திய அணியின் பயிற்சியாளருமான சுரேஷ்பாபு இவர்களுக்கு பயிற்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.