கடந்த ஆட்சியை விட நான்கு மடங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உணவுப் பொருட்கள் மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், '' தேர்தல் சமயத்தில் முதல்வர் தகுதியுள்ள யாராக இருந்தாலும் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தால் அதை 15 நாட்களில் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். இன்று ஆட்சி பொறுப்பேற்று 18 மாத காலத்தில் 13 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஒரு வாரக் காலத்திலேயே 186 பேர் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திமுக அரசைப் பொறுத்த அளவில் கடந்த ஆட்சியை விட நான்கு மடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டிருந்தாலும் பொருளைக் கைப்பற்றுவதாக இருந்தாலும் சரி, வழக்காக இருந்தாலும் சரி, குண்டர் சட்டத்தில் அவர்களுக்குத் தண்டனை பெறுவதற்கும், வாகனங்களைப் பறிமுதல் செய்கிற பணியிலும் கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் நான்கு மடங்கு குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை ஈடுபட்டு அண்டை மாநிலங்களுக்கு அரிசி கடத்துவதைத் தடுத்து வருகிறது'' என்றார்.