கனமழையால் ஏற்காடு மலைப்பாதையில் திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. நான்கு மணி நேரத்தில் மண் சரிவு பிரச்சனை சரி செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்திலும் இரு நாள்களாக மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்து வருகிறது. ஏற்காட்டில், சனிக்கிழமை இரவு பெய்த மழையால் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 40 அடி பாலத்திற்கும் 60 அடி பாலத்திற்கும் இடையே திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் சாலையில் பாறாங்கற்கள் உருண்டோடி வந்து விழுந்தன. சரிந்த மண்ணும் பாதையிலேயே குவிந்து கிடந்தது. இதையடுத்து அந்த பாதையில் போக்குவரத்து முடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். ஜே.சி.பி உள்ளிட்ட இயந்திரங்கள் உதவியுடன் 4 மணி நேரத்தில் மண் சரிவு சீரமைக்கப்பட்டது. இதையடுத்து சேலம் - ஏற்காடு சாலையில் போக்குவரத்து சீரடைந்தது.
மண்சரிவு குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நேரில் சென்று சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். ஏற்காடு செல்லும் சாலையில் எதிர்காலத்திலும் மண் சரிவு பிரச்சனைகள் வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஏற்காடுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர், கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார். சுற்றுலா பயணிகளுக்காக செய்துள்ள அடிப்படை வசதிகளையும் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறுகையில், ''ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவு, இரவோடு இரவாக சரி செய்யப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மண்சரிவு பிரச்சனை சரி செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இரவில் கனமழை இருந்தால், பாதையை மூட வேண்டியிருக்கும். சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருள்கள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். கோடை விழா நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன'' என்றார்.