நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள காந்தி நகரில் பிஜ்லான் என்பவர் வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். இதற்காக 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த வீட்டிற்கான கட்டுமான பணியின் போது வீட்டின் பக்கவாட்டு பகுதியில் மண்ணை வெட்டி எடுத்தபோது 30 ஆண்டுகள் பழமையான கழிவறை இடிந்து விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த மண் சரிவில் 8 பேர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மண் சரிவில் சிக்கிய 8 பேரில் 6 பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டட உரிமையாளர் பிரிஜ்ஜோ, பொறியாளர் ஜேக்கப் மேத்யூ மற்றும் ஒப்பந்ததாரர் ஜாஹீர் அகமது ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூவரும் ரகசிய இடத்தில் வைத்து போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்டுமான துறையில் விதிமீறல்கள் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.