திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா நாளான இன்று (நவம்பர் 29ந்தேதி) மாலை 6.01 மணியளவில் 2,668 அடி உயரம்முள்ள மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் இன்று முதல் 11 தினங்களுக்கு மலை உச்சியில் எரியும்.
கரோனா பரவலை முன்னிட்டு கிரிவலம் வரவும், மலையேறவும் தடை விதிக்கப்பட்ட நிலையில், கோயிலுக்குள் இருந்து தீபத்தை காணவும், அர்த்தநாரீஸ்வரரை காணவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோயிலுக்குள் சுமார் அதிகாரிகள், நீதித்துறையை சேர்ந்தவர்கள், காவல்துறையினர், மக்கள் பிரதிநிதிகள், ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் என சுமார் 2,500 பேர் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் சிலருக்கு கோயில் பணியாளர்கள் என பாஸ் வழங்கப்பட்டிருந்தது.
மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் திருவண்ணாமலை நகர வாழ் பக்தர்கள் பட்டாசு வெடித்தும், தங்களது வீடுகளில் தீபம் ஏற்றியும் வணங்கினர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாடவீதியை வலம் வந்துக் கொண்டுள்ளனர். 14 கி.மீ சுற்றளவுள்ள மலையை கிரிவலம் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கிரிவலப்பாதையில் சுமார் 10 இடங்களில் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு கிரிவலம் தொடங்கும் பக்தர்களை திருப்பி அனுப்பினர். இதனால் உள்ளுர் பக்தர்கள் மலை கிரிவலத்துக்கு பதில் மாடவீதி வலம், அதாவது கோயிலை வலம் வந்து தங்களது நேர்த்திக்கடனை முடித்துக்கொள்ள முடிவு செய்து அதன்படி வலம் வரத்தொடங்கியுள்ளனர். பக்தர்களை இனியும் தடுத்தால் சிக்கல் ஏற்படும் என்பதால் காவல்துறையினர் ஒதுங்கிக்கொண்டனர். இதனால் மாடவீதியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.