கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் கன மழையால், அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி,குளங்களுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் செந்துறை அடுத்த ராயம்புரம் கிராமத்திலுள்ள இடையன்குளம் ஏரி கரையில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் அதிகமாக வெளியேறி கொண்டிருக்கிறது.
ஏறியில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாக வயல் நிலங்களில் பெருகி வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள் செந்துறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் பார்வையிட்ட, கோட்ட ஆட்சியர் பாலாஜி, அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன், அரியலூர் வட்டாட்சியர் அலுவலர் கதிரவன் ஆகியோர் உடைப்பை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இருப்பினும் குடிமராமத்து என்ற பெயரில் எட்டு லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும், முறையாக கரையை பலப்படுத்தாததே கரை உடைப்புக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.