தமிழக பாடத்திட்டத்தில் சவார்க்கர் வரலாறு இல்லாதது ஆளுநருக்கு வருத்தமாக இருக்கலாம் என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ''சரியான தகவல் ஆளுநருக்கு போய் சேரவில்லை என நினைக்கிறேன். ஆளுநர் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை மீறி மற்றப்பணிகளில் இருப்பதுபோல பிறரும் இருப்பார்கள் என நினைக்கிறார். அது தவறு. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் நிறையப் பேர் இந்திய அளவில் எல்லா துறைகளிலும் உள்ளனர். விஞ்ஞானிகளாக கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்தவர்கள் தான் இருக்கிறார்கள். இதில் ஆளுநருக்கு என்ன வருத்தமோ தெரியவில்லை.
சனாதன தர்மத்தில் பாடம் வைக்கவில்லை என்பது அவருக்கு வருத்தமாக இருக்கலாம். வீரசவார்க்கர் வரலாறு இல்லை அந்த இடத்தில் வ.உ.சி வரலாறு இருக்கிறது. வ.உ.சி பாரிஸ்டர் பட்டம் பெற்ற செல்வந்தர், இரண்டு கப்பலை வாங்கிவிட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு கோயம்புத்தூரில் செக்கிழுத்து கடைசியில் எல்லா சொத்தையும் பிரிட்டிஷ் ஆட்சியால் இழந்தவர். மகாத்மா காந்தியே நிவாரணமாக நன்கொடை வசூல் செய்து கொடுக்கும் போது மறுத்து விட்டார். வேண்டாம் நான் யாரிடமும் கையேந்த மாட்டேன் என்று அவருடைய கடைசி காலம் முழுவதும் அவரும் அவருடைய மகளும் தெருவில் மண்ணெண்ணெய் விற்று வாழ்க்கை நடத்தினார்கள். அந்த அளவுக்கு யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்தார். இது தமிழ்நாட்டு சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சியின் வரலாறு. அவர்கள் சொல்கின்ற வீர சாவர்க்கர் அந்தமானில் சிறையில் இருந்தார். மூன்று முறை மன்னிப்பு கடிதம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு கொடுத்தார். மன்னித்து விடவில்லை நான்காவது கடிதம் கொடுத்து அந்தமான் சிறையில் வெளியே வந்தார். வெளியே வந்தவர் சும்மா இருக்கவில்லை பிரிட்டிஷ் ஆட்சியினுடைய சாதனையை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கு மாத ஊதியம் தாங்கள் என்று, மாதம் 67 ரூபாய் வாங்கியதாக வரலாறு.
இதில் யார் வரலாற்றை வைக்க வேண்டுமோ அவர்களுடைய வரலாற்றை வைத்திருக்கிறோம். சவர்க்கார் வரலாறு இல்லை என்ற ஒரு வருத்தம் ஆளுநருக்கு இருக்கலாம். அதை நாம் வைக்க மாட்டோம். வைக்க முடியாது. மன்னிப்பு கேட்கின்றர்கள் வரலாற்றில் இருக்க மாட்டார்கள். காட்டிக் கொடுப்பவர்கள், மன்னிப்பு கேட்பவர்கள் வரலாற்றை பிஞ்சு உள்ளங்களுக்கு எப்படி சொல்லிக் கொடுக்க முடியும். தமிழ்நாடு கல்வியில் முதல் நிலையில் உள்ளது. 18 துறை சார்ந்த கல்வித்துறையில் 13 இடங்களில் நாம் முன்னிலையில் இருப்பது ஆளுநருக்கு வருத்தமாக இருக்கலாம்'' என்றார்.