இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் பற்றாக்குறையும் ஏற்படும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதமே நாடாளுமன்றத்தின் நிலைக்குழு எச்சரிக்கை செய்தும், அதில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்திருக்கின்றன. கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தியிருக்கிறது நாடாளுமன்றத்தின் சுகாதார நிலைக்குழு.
அந்த ஆய்வின்போது, ஆக்சிஜன் தேவை குறித்தும் ஆராய்ந்துள்ளனர் நிலைக்குழு உறுப்பினர்கள். அப்போது, சுகாதாரத்துறை உயரதிகாரிகளுடன் நிலைக்குழு ஆலோசித்தபோது, ஆக்சிஜன் தேவை அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தவிர, மருத்துவ வல்லுநர்களிடம் விசாரித்தபோதும், ஆக்சிஜன் தேவை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது என்று சொன்னதையும் குறித்துக்கொண்டது நிலைக்குழு.
அந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் ஒரு அறிக்கையை தயாரித்த சுகாதாரத்துறைக்கான நிலைக்குழு, ராஜ்யசபாவின் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அந்த அறிக்கையை சமர்பித்துள்ளது. அதில், ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் என்பது குறித்தும், அதனால் ஆக்சிஜன் தயாரிப்பதை அதிகப்படுத்த வேண்டும் என்றும் ஒரு பரிந்துரையை சுட்டிக்காட்டியுள்ளனர் நிலைக்குழு உறுப்பினர்கள்.
அந்த அறிக்கை லோக்சபாவிலும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. மேலும் அலட்சியமாகவும் இருந்துள்ளது. முன்னெச்சரிக்கையாக ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைய அவலங்கள் நடந்திருக்காது என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.