
கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சருமான சி.வி. கணேசனின் மனைவி பவானி, உடல் நல குறைவால் இன்று காலமானார். இவர்களுக்கு கவிதா லட்சுமி, கனிமொழி, கலையரசி, சிந்து, ஆகிய நான்கு மகள்கள் வெங்கடேஷ் என்று ஒரு மகன் உட்பட ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.
இவர்களுக்கு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேப்பூர் அடுத்துள்ள கழுதூர் சொந்த ஊர். கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலம் நகரில் புதிய வீடு கட்டி குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். தொகுதி மக்களிடம் மிகுந்த செல்வாக்குடன் உள்ளவர்களில் அமைச்சர் கணேசனும் ஒருவர்.
அமைச்சர் கணேசனின் மனைவி மறைவு குறித்து அப்பகுதி மக்களும், திமுகவினரும் கூறுகையில், ‘அவரது மனைவி பவானி, கணவரின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்துகொள்வார். அமைச்சரை காண வருபவர்களிடம் மிகுந்த மரியாதையுடனும், அன்புடனும் நடந்து கொள்வார். அமைச்சர் மனைவியும், அவரது பிள்ளைகளும் மக்களிடம் மிகவும் எளிமையாக பழகுவார்கள். இவரின் மறைவு அமைச்சருக்கும், எங்களுக்கும் பெரும் இழப்பு’ என்று தெரிவித்தனர்.