தமிழ்நாட்டில் இரண்டு இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வருகிற 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ள நிலையில், திமுக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். அதைப்போல தற்போது அமைச்சராக உள்ள தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் எல். முருகன் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை. எனவே அவர் அமைச்சராக பொறுப்பேற்ற நாளில் இருந்து 6 மாதத்துக்குள் தேர்தலில் போட்டியிட்டோ அல்லது மாநிலங்களவை மூலமாகவோ நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய சூழல் இல்லாத நிலையில், அவர் மத்தியப் பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜக தலைமை சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று (21.09.2021) காலை அவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். தற்போது மணிப்பூர் ஆளுநராக உள்ள இல.கணேசன், ஏற்கனவே ஒருமுறை மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.