Skip to main content

புது புரூடா - எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை? :கி.வீரமணி திக தலைவர்

Published on 02/02/2019 | Edited on 02/02/2019

 

vee

 

கி.வீரமணி மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பதவிக் காலம் இன்னும் 60 நாள்கள் கூட இல்லாத நிலையில், அந்த அரசால் நேற்று (1.2.2019) தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட் -2019-2020 (Interim Budget - 2019-2020) என்பது உலகறிந்த உண்மை. தேன் தடவிய வாக்குறுதிகளை அள்ளி வீசியிருப்பது எதைக் காட்டுகின்றது? ஆனால், இந்த வரவு - செலவுத் திட்டத்தினை ஏதோ அடுத்த அய்ந்தாண்டு காலத்திற்கும் இவர்களுக்குப் பட்டா எழுதிக் கொடுத்ததுபோல, பல தேன் தடவிய வாக்குறுதிகளை அள்ளி வீசியிருப்பது எதைக் காட்டுகின்றது? மலையை நகர்த்தி வைக்க 30 நாள் எனக்கு ஊட்டச் சத்துணவு தந்து பராமரியுங்கள் என்று கூறி, அதை நம்பி 30 நாளும் உணவு கொடுத்து ஊக்கமூட்டினால் - கெடு நாள் வந்தவுடன், ‘‘அதைத் தூக்கி என் தோளில் வைத்தால் வேறு இடத்தில் அதை மாற்றி வைத்து விடுகிறேன்’’ என்று கூறிய மோசடி வித்தைக்காரரைப்போல, மோடி அரசின் பட்ஜெட், பல்வேறு ஒப்பனைகளை வைத்து தாக்கலாகியிருக்கிறது.

 

பட்ஜெட் அல்ல; பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை இதை நிதிநிலை அறிக்கை என்பதைவிட, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்று கூறுவதே மிகவும் பொருத்தமாகும்! முந்தைய தேர்தல் வாக்குறுதிகளில் 15 லட்ச ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் - கறுப்புப் பணத்தை மீட்டு போடுவோம் என்பது நடந்ததா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்பது நிறைவேற்றப்பட்டதா? அதன் ரகசியத்தை நிதின் கட்கரி உடைத்தாரே, நினைவில்லையா? விவசாயிகளின் வேதனைகளும், தற்கொலைகளும் கடந்த நான்கே முக்கால் ஆண்டு மோடி - பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் குறைந்ததா?

 

தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் குறி வைத்து தாக்கப்படுவதோடு, அவர்களது வாழ்வாதாரத்தைப் பறிக்கும் நிகழ்வுகள் அன்றாட கொடுமைகளாகத் தொடரும் நிலையில், அடுத்து வந்தால், மீனவருக்கென ஒரு தனி அமைச்சகம் அமைப்பார்களாம்; இது மீனவ சமூகத்தை ஏமாற்றுவதல்லாமல், வேறு என்ன? தனி அமைச்சரகம் இல்லாததால்தான் - அவர்களுக்கு எதிராக அன்றாடம் நடைபெறும் அநீதி - அக்கிரமங்களைத் தடுக்க முடியவில்லையா? எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை. அதுவும் கடந்த நான்கரை ஆண்டுகளில் உதயமாகாத ஞானோதயம் - புது புரூடா - இப்போதுதான் தோன்ற வேண்டுமா? இந்த வாக்கு வங்கி வித்தைகளால் எந்த மீனவ சகோதரரும் ஏமாறமாட்டார்கள்.

 

‘இந்து’ ஏட்டின் தலைப்பு! ‘‘வாக்குகளை இதன்மூலம் வாங்குவதற்கான பேர பட்ஜெட்’’ என்று ‘இந்து’ ஏடு (ஆங்கிலம்) ‘‘Shopping for Votes’’ என்ற தலைப்பிட்டு எழுதியுள்ளது - நன்கு நிலைமையை விளக்கியுள்ளது. மரபுகள் மீறப்பட்டு, தங்களது அதிகார எல்லை தாண்டிய வாக்குறுதிகளைப் போலவே, நிதி ஆதாரங்களைப்பற்றிக் கவலையே இன்றி, ‘மெகா’ ‘மெகா’ திட்டங்களைக் கூறியுள்ளது. இந்த பட்ஜெட் மூலம் புது வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுமா என்ற கேள்வியைவிட, நம் இளைஞர்களுக்குப் பறிபோன வேலை வாய்ப்புகளாவது மீண்டும் கிடைக்க வாய்ப்பு உண்டாகுமா? என்ற கேள்விக்காவது விடை இருக்கிறதா? தேடிப் பாருங்கள், புரியும்! வானவில் போன்றது இது; பார்க்க அழகு - பயன் ஏதும் இருக்காது.!

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Parliamentary budget session begins today

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (31-01-24) தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (01-02-24) மத்திய அரசின் 2024 -2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தொடரின் போது விலைவாசி உயர்வு, ராமர் கோயில் திறப்பு விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல், குளிர்கால கூட்டத் தொடரின்போது 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, அமலாக்கத்துறையினர் மீதான புகார்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், நாடாளுமன்றத்தில் நடந்த இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.  அமளியில் ஈடுபட்ட 146 எம்.பி.க்கள் அந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்க நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். 
 

Next Story

“தளராது செயல்பட்டு வருபவர்” - கமல்ஹாசன் வாழ்த்து

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

kamalhassan birthday wishes to k veeramani

 

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி இன்று தனது 91வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் சென்று வாழ்த்தினார். அந்த புகைப்படங்களை அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, “அகவையில் மட்டுமல்ல, சுறுசுறுப்பிலும் எங்களை எல்லாம் மிஞ்சிய மானமிகு அய்யா கி. வீரமணி அவர்களின் 91-ஆவது பிறந்தநாளில் நேரில் வாழ்த்தி வணங்கினேன். தங்களின் வழிகாட்டுதல் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்க வேண்டும். பெரியாரியப் பெரும்பணி தொடர வேண்டும்! சமூகநீதிக் களத்தில் ‘வீரமணி வெற்றி மணியாக ஒலிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “தந்தை பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்பவரும், இடையறாத பணிகளுக்கிடையில் பேச்சு, எழுத்து, பத்திரிகை என்று தளராது செயல்பட்டு வருபவருமான என் மதிப்புக்குரிய நண்பர், திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர்  கி. வீரமணி அவர்களுக்கு இப்பிறந்தநாளில் என் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.