தமிழர்களைக் கொன்று குவித்த இனப்படுகொலையாளர் மகிந்த ராஜபக்சே போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற வேண்டியவர்: அவர் இலங்கையின் பிரதமராக இரவோடு இரவாக அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தியாவுக்குத் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களின் மனித உரிமை மற்றும் வாழ்வாதாரக் கண்ணோட்டத்தில் இந்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை:
மகிந்த ராஜபக்சே அதிபராகவும், இராணுவ அமைச்சராக சிறீசேனாவும் இருந்து தமிழர்களைக் கொன்று குவித்த கூட்டணி இப்பொழுது பதவிகளின் பெயர்கள் மாறி மறுபடியும் மிச்ச சொச்சம் இருக்கும் தமிழர்களை முற்றிலும் துடைத்தெறியும் கருப்பு அத்தியாயத்திற்கு தொடக்கப் புள்ளி வைத்தாயிற்று.
ஒரு நாள் நள்ளிரவில் திடீர் பிரதமரா?
எதிர்காலத்தில் இலங்கையில் இருக்கப் போவது இரண்டே இனங்கள்தான். ஒன்று சிங்களவர் இனம், இன்னொன்று சிங்களக் கலப்பினம்தான் என்று சொன்னவர்தான் மகிந்த ராஜபக்சே.
அந்த ராஜபக்சே ஒரு நாள் நள்ளிரவில் இப்பொழுது திடீர் பிரதமர் ஆக்கப்பட்டு விட்டார். பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கே பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதாக அதிபர் மாளிகை அறிவித்திருக்கிறது.
சட்டப்படி சிறீசேனாவுக்கு அதிகாரம் உண்டா?
ரணில் விக்ரம சிங்கேயின் அய்க்கிய தேசிய கட்சியும், சிறீசேனாவின் சுதந்திரா கட்சியும் இணைந்த கூட்டணி ஆட்சிதான் இலங்கைத் தீவில் நடைபெற்றது. ரணில் விக்ரம சிங்கே நீக்கப்பட்டாலும், (நாடாளுமன்றத்தில் அய்க்கிய தேசிய கட்சியின் எண்ணிக்கை 106) அதிபர் சிறீசேனாவின் சுதந்திரா கட்சி மற்றும் ராஜபக்சேயின் ஆதரவு அணியின் கூட்டுச் சேர்ந்தாலே 95 எம்.பி.க்கள்தான். பெரும்பான்மையை நிரூபிக்க 113 உறுப்பினர்கள் தேவை.
இந்த நிலையில் எந்த அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவை அதிபர் சிறீசேனா நீக்கினார் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியும், தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டுள்ள சட்ட நெருக்கடியுமாகும். போர்க் குற்றவாளி என்ற கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய ராஜபக்சேயை பிரதமராக்கியுள்ளது எந்த அடிப்படையில் சரியானது?
சிறீசேனா ராஜபக்சேமீது வைத்த குற்றச்சாட்டுகள் எல்லாம் என்னாயிற்று? அய்.நா. அமைத்த குழுவின் அறிக்கை என்ன?
இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் மார்ச்சுகி தாருஸ்மான் தலைமையில், அமெரிக்காவின் சட்ட வல்லுநர் ஸ்டீவன் ரெட்னா, தென்னாப்பிரிக்கா அறிஞர் யாஷ்மின் சூங்கா ஆகியோர் இருவர் அடங்கிய குழு அய்.நா.வால் அமைக்கப்பட்டதே - அந்தக் குழுவின் அறிக்கையும், அய்.நா.வின் செயலாளர் பான்-கீ.மூனிடம் அளிக்கப்பட்டதே (13.42011) அந்த அறிக்கையில் கூறப்பட்டது என்ன?
தமிழர்களுக்கு எதிராகக் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அய்.நா.வால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு வழங்கப்படும் மய்யங்கள்கூட இராணுவத் தாக்குதலுக்குத் தப்பிடவில்லை. மருத்துவமனைகளும் தாக்கப்பட்டன. வெளிநாட்டு உள்நாட்டு ஊடகக்காரர்களும் அனுமதிக்கப்படவில்லை என்று அந்த மூவர் குழுவால் அளிக்கப்பட்ட அறிக்கை பட்டவர்த்தனமாக ராஜபக்சே அரசின் அத்துமீறல்களை அம்பலப்படுத்தவில்லையா?
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையல்ல!
இந்த நிலை இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல; உலக நாடுகள் மத்தியிலும், அய்.நா.வின் பார்வையிலும் இந்த நிலை கடுமையாகப் பார்க்கப்பட வேண்டியதாகி விட்டது. பன்னாட்டு விசாரணைக் குழுவுக்கு பதில் இலங்கை அரசு தனக்குத்தானே குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதே!
அப்படி ராஜபக்சேவால் அமைக்கப்பட்ட குழுவின் முன் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார், விசரர் சூசை அடிகளார், சேவியர் குலூஸ் அடிகளார் ஆகியோர் அந்தக் குழுமுன் 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்கள் எங்கே போனார்கள் என்று விளக்கம் கேட்டனரே, இதுவரை பதில் உண்டா?
போர்க் குற்றவாளி தான் இலங்கைப் பிரதமரா?
இந்த நிலையில் போர்க் குற்றவாளியாக சிறையில் இருக்க வேண்டிய மகிந்த ராஜபக்சே இலங்கையின் பிரதமராக ஆக்கப்பட்டுள்ளார் என்றால் இந்தக் கொடுமையை வேறு எந்த எடுத்துக்காட்டை எடுத்துக்காட்டி நியாயப்படுத்த முடியும்.
முன்னாள் அதிபர் ராஜபக்சே பற்றி வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?
2017-ஆம் ஆண்டு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறீசேனா, பன்னாட்டு மனித உரிமைக்குழுவின் அறிக்கை வெளியாகும் முன்பு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த போது கூறியதாவது, “சிறீலங்காவில் போர்க் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், மகிந்த ராஜபக்சேவின் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் அவரது குடும்பத்தினர் விசாரணை வளையத்திற்குள் வந்துவிட்டனர். சிலர் கைதாகியுள்ளனர்.
அவரது நெருங்கிய உறவினர்கள் வீட்டுசிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் போர்க்குற்ற நடவடிக்கை தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என எனது தலைமையிலான அரசு பதவியேற்ற போதே தெரிவித்திருந்தேன்’ என்று கூறினாரா இல்லையா? அந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து ராஜபக்சே குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விட்டதா?
போர் முடிந்து புது ஆட்சி அமைந்த நிலையில் அதிபர் சிறீசேனா கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?
தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றம்
தமிழர்களின் பூர்வீக மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீதிமன்ற - ஒரு தீர்ப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டு விட்டது.
தமிழர்கள் பகுதிகளிலிருந்து சிங்கள இராணுவம் வெளியேற்றப்படவில்லை. தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றம் திட்டமிட்டு நடைபெற்று வரவில்லையா? 1948களில் தமிழர்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்கள் சதவீதம் வெறும் எட்டுதான். இப்பொழுது 30 சதவீதத்தையும் தாண்டி நாளும் பெரும் ஆக்கிரமிப்பாக உருவெடுத்து விட்டதே!
நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கும், ஈழத் தமிழர் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு காண்போம் என்று சொன்ன பிஜேபி தானே இப்பொழுது ஆட்சியில் இருக்கிறது.
இந்திய அரசு என்ன செய்கிறது?
இவ்வளவும் நடந்து கொண்டிருக்கும் பொழுது, தமிழர்களின் தொப்புள் கொடி உறவான இந்தியத் துணைக் கண்டம் சம்பந்தப்பட்டதான இந்தப் பிரச்சினைமீது இந்திய அரசு தன் கருத்தை உரத்த குரலில் கூறி இருக்க வேண்டாமா?
சீனா எப்படி காயை நகர்த்துகிறது என்ற பார்வையளவில் மட்டும்தான் இலங்கை பிரச்சினையை இந்தியா அணுகப் போகிறதா?
சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான போட்டிக்கு அகப்பட்டுக் கொள்ள தமிழர்கள்தான் கிடைத்தார்களா?
கிளர்ச்சிகள் வெடிக்கும் நிலை!
மறுபடியும் தமிழ்நாட்டுத் தமிழர்களும், உலகத் தமிழர்களும், மனித உரிமையாளர்களும் கிளர்ந்தெழுவதற்கு முன் இந்திய அரசு விழித்துக் கொள்ள வேண்டும்.
இந்திய அரசின் கொள்கை
இலங்கையில் நடப்பது இனப்படுகொலைதான் என்று இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இந்திய நாடாளுமன்றத்தில் (16.8.1983) அறிவித்ததை ஒரு கட்சிக்கண் கொண்டு சிந்திக்காமல் - இந்திய அரசின் நிலைப்பாடு என்ற கண்ணோட்டத்தில் மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அவசர அவசரமாக ஈழத் தமிழர்களின் உரிமைக்கும், கண்ணியமான வாழ்வாதார உரிமைக்கும் உத்தரவாதம் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும், தலையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.