நான் சென்னையில்தானிருக்கிறேன். காவல்துறை முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார் எஸ்.வி.சேகர். காவல்துறை கைகட்டிக்கொண்டு இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பி.ஜே.பி. பிரமுகர் எஸ்.வி.சேகர் ஊடகத் துறைகளைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். பெண்கள் மட்டுமல்ல, அனைவரும் கடுமையான வகையில் கண்டனத்தைத் தெரிவித்து, வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் அவர்மீது, அவதூறு பரப்பி அமைதியை சீர்குலைப்பது (இ.த.ச.504), எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக குற்றம் இழைக்கத் தூண்டுவது (இ.த.ச. 505 (1) (சி), சொல், செயல் மூலமாக பெண்களின் நடத்தையை இழிவுபடுத்துவது (இ.த.ச.509), தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தலைமறைவான அந்த நபர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு போட்டும், நீதிமன்றம் மனுவைத் தொடர்ந்து தள்ளுபடி செய்துவிட்டதோடு, கடுமையாக நீதிபதி சாடியும் உள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், அந்தப் பேர்வழி, சென்னையில் நேற்று முன்தினம் (12.5.2018) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளார்! அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களையும் சந்தித்துள்ளார். இந்தச் செய்தி நேற்றே (13.5.2018) தொலைக்காட்சிகளிலும், விடுதலை நாளிதழிலும், இன்று தினத்தந்தியிலும் வெளிவந்துள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர் ஒரு விழா நிகழ்ச்சியில் பங்கு கொண்டதையும், தனக்கு வணக்கம் தெரிவித்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதைவிடக் கொடுமை என்னவென்றால், நான் சென்னையில்தானிருக்கிறேன். காவல்துறை முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.
சென்னைப் பெருநகரக் காவல்துறை அவரைக் கைது செய்யாதது ஏன்? ஒரே நேரத்தில் 62 ரவுடிகளைப் பிடித்துச் சாதனை படைத்த திறமைக்குச் சொந்தமானது சென்னைப் பெருநகரக் காவல்துறையும் - அதன் சிறப்பான ஆணையரும்.
இத்தகு காவல்துறை எஸ்.வி.சேகர் விஷயத்தில் கைகட்டிக் கொண்டு இருப்பது ஏன்? யாருடைய கட்டளையால் இந்த நிலை? தமிழக அரசின் தலைமைச் செயலாளரே பின்னணியில் இருக்கிறார் என்ற கருத்துப் பரவலாக இருக்கிறதே!
இந்த நிலை தமிழக அரசுக்கும், சென்னை பெருநகரக் காவல்துறைக்கும் பெருமை சேர்ப்பதாகாது.
உடனே, சவால் விடும் அந்தப் பேர்வழியை இன்றே கைது செய்யாவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்!