38 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றாலம் சிற்றருவி வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வந்தது.
நெல்லை மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் உள்ள ஏழு அருவிகளில் சிற்றருவியும் ஒன்று. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவியில் வழியாகத்தான் செண்பகாதேவி அருவிக்கும் செல்ல முடியும்.
குற்றால அருவிகளில் நீராட கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் சிற்றருவியில் மட்டும் இரண்டு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
வனத்துறைக்கு சொந்தமான இந்த அருவி 1981 ஆம் ஆண்டு நீண்ட கால குத்தகை அடிப்படையில் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் பிறகு இந்த அருவியில் குளிப்பதற்கு கட்டணம் நிர்ணயித்து அதன் மூலம் பேரூராட்சி நிர்வாகம் வருமானம் ஈட்டி வந்தது. மேலும் தொகை கட்டணத்தை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை செலுத்தாததாலும் குத்தகையை நீட்டிப்பு செய்யாததாலும் வனத்துறை இந்த அருவியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முடிவு செய்தது.
இந்த நிலையில் இந்த குத்தகை காலம் முடிவடைந்ததையொட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு அருவியை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் வனத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனிடையே சிற்றருவியில் கட்டணம் வசூலிக்கும் உரிமை குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. அந்த குத்தகையை எடுத்தவர்களுக்கு இந்த ஆண்டு மார்ச் 31 வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் மாதமே அருவியை ஒப்படைக்க வேண்டும் என்று வனத்துறை கோரியிருந்த நிலையில் குத்தகைதாரர்கள் தென்காசி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மார்ச் 31ம் தேதி வரை தங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு மார்ச் 31 வரை கட்டணம் வசூலிக்க உரிமை நீட்டிக்கப்பட்டது. தற்போது அந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதல் வனத்துறை சிற்றருவியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதையடுத்து இன்று காலை குற்றாலம் வந்த வனத்துறை அதிகாரிகள் சிற்றருவிக்கு செல்லும் சாலையில் உள்ள கேட்டில் இரண்டு பூட்டுகள் போட்டு சீல் வைத்தனர்.
கிராம வனக்குழு மூலம் மூலம் இனி சிற்றருவி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். என்றும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அருகில் செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் வனத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து குற்றாலம் வனச்சரகர் ஆரோக்கியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒப்பந்தப்படி குத்தகை காலம் நிறைவடைந்தது. கடந்த ஒன்றாம் தேதி முதல் சிற்றருவி யை வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம் இனி முழுக்க முழுக்க இந்த அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் என்றார்.