அரசுகளின் பிடிவாத குணத்தால்தான் ஒரு நல்ல மருத்துவரை இழந்துள்ளோம்: விஜயதாரணி
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா மருத்துவ படிப்பில் சேர முடியாத விரத்தியில் தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி அனிதா தற்கொலை தொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதாரணி,
மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு எனது சார்பாகவும், காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற மனநிலைக்கு மாணவர்கள், மாணவிகள் தள்ளப்படக்கூடாது. இந்த ஆண்டு இல்லையென்றால், அடுத்த ஆண்டு முயற்சி செய்து வரலாம் என்ற தைரியம் மாணவர்களுக்கு வர வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் தவறான முடிவுகளால், கடைசி நிமிஷம் வரை தள்ளிக்கொண்டு போனதால் இந்த நிலைமை வந்துள்ளது. மாநில திட்ட பாடங்களை படித்து அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவ மாணவிகளுக்கு உச்சநீதிமன்றம் ஒரு வழி காட்டியிருக்கலாம். மத்திய, மாநில அரசுகளின் பிடிவாத குணத்தால்தான் ஒரு நல்ல மருத்துவரை இழந்துள்ளோம்.
எனக்கு சிறிய அளவிலான மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காமல் போனது. நானும் அன்றைக்கு ஏமாற்றம் அடைந்தேன். உடனே சட்டத்தை தேர்ந்தெடுத்தெடுத்தேன். நன்றாக படித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும் இருக்கிறேன். எம்எல்ஏவாகவும் இருக்கிறேன். நான் துறை மாறி படித்ததாலேயோ, விருப்பத்திற்கு மாறாக படித்ததாலேயோ நான் வாழ்க்கையில் தோல்வியடையவில்லை. வெற்றிபெற்றிருக்கிறேன். ஆகையால் மாணவ மாணவிகள் எந்த மனதோல்வியும் அடையக்கூடாது. எந்த துறையை எடுத்தாலும் முன்னேறலாம், அதில் போராடி வெற்றி பெற வேண்டும். மாணவர்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. இவ்வாறு கூறினார்.
-வே.ராஜவேல்