தாராசுரம் காய்கனி மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என சில்லரை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட தாராசுரத்தில் உள்ள நேரு அண்ணா காய்கறி மார்க்கெட், மிகப்பெரிய மார்க்கெட்டுகளில் முதன்மையானது, அங்குள்ள நூற்றுக்கணக்கான சில்லரை வியாபாரிகள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர், அங்கு வைக்கப்பட்டிருந்த கோரிக்கை பெட்டியில் தாங்கள் கொண்டு வந்திருந்த கோரிக்கை மனுக்களைப் போட்டுவிட்டு பத்திகையாளர்களைச் சந்தித்து தங்களின் நிலமையை எடுத்துக்கூறினர்.
"கடந்த மார்ச் 30ஆம் தேதி முதல் நாங்கள் வியாபாரம் செய்யவில்லை. வேலை இன்றி எங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கிப் போய்விட்டது. கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வருகிறோம். முன்பு வாங்கிய கடனைத்திருப்பிச் செலுத்த முடியாமல் அவமானப்பட்டு நிற்கிறோம். குடும்பமே பசி, பட்டினியால் வாடுகின்றன. எங்களது நிலையை மனதில் நிறுத்தி, எங்களுக்கு வாழ்வளிக்க வேண்டும். எனவே நேரு அண்ணா காய்கறி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் செய்ய வாரம் ஒரு முறை 100 நபர்கள் வீதம் சுழற்சி முறையில் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்," என அந்த மனுவில் கூறியிருந்ததைத் தெரிவித்தனர்.