கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு இல்லாத பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தும். தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்கள் வழக்கம் போல் தேர்வு மையங்களுக்கு செல்வார்கள்.
நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி என அனைத்து அருவிகளிலும் இரவு முழுவதும் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கனமழை காரணமாக நெல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.